Appam, Appam - Tamil

மார்ச் 13 – அன்பின் வலிமை!

“தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர் (ஏசா. 38:17).

ஒரு ஊரிலே வயதான மூதாட்டி ஒருவர் இருந்தார். எப்பொழுதும் பெருமையும், அகங்காரமும், எரிச்சலும், கோபமும் அவர்களிடத்தில் இருந்தபடியால், அந்த ஊர் மக்கள் யாரும் அவரிடத்தில் பழக முன்வரவில்லை. நண்பர் என்று சொல்ல ஒருவருமில்லை. பணத்தினால் எல்லாவற்றையும் சாதித்துவிடலாம் என்று எண்ணிய அவர் எப்பொழுதும் தனிமையிலேயே வாழ்ந்துவந்தார்.

அந்த ஊருக்கு அன்பு நிறைந்த போதகர் ஒருவர் புதிதாக வந்தார். அவருக்கு இந்த மூதாட்டியின்மேல் ஒரு கரிசனை ஏற்பட்டதால் வீடு தேடிச்சென்றார். ஆனால், அந்த மூதாட்டியோ அவரை வரவேற்கவோ வீட்டுக்குள் அழைக்கவோ இல்லை.

ஆனாலும், அவர் விட்டுவிடவில்லை. போகும்போதெல்லாம் அருமையான பழங்களையும், பலகாரங்களையும் கொண்டுசென்றார். அன்பினால் அம்மூதாட்டியை மேற்கொள்ளத் தீர்மானித்தார். அப்படியும் அந்த பெண் அவரை நம்பவில்லை. ‘முதலில் இப்படித்தான் அன்பு செலுத்துகிறவர்கள்போல வருவார்கள். பின்பு ஏமாற்றிவிடுவார்கள்’ என்று சொல்லி விலகியே இருந்தார்.

அப்போதும் அந்தப் போதகர் மனம் தளர்ந்துவிடவில்லை. இன்னும் அதிகமாய் அன்பு செலுத்தி, அந்த மூதாட்டியிடம் இருக்கிற நல்ல குணங்கள் என்ன என்று பார்த்து அவற்றைச்சொல்லி மனதாரப் பாராட்டினார். வீட்டிலுள்ள பொருட்களை அழகாயும், சுத்தமாயும் வைத்திருப்பதைப் பாராட்டினார். வீட்டிலுள்ள தோட்டத்தைப் பாராட்டினார். பல நாட்களுக்குப் பிறகுதான் அந்தப் போதகர் உண்மையான தெய்வீக அன்பு உடையவர் என்பதை அந்த மூதாட்டி அறிந்துகொண்டார்.

போதகருடைய அன்பின் கரிசனையைக் கண்டு வியந்த அப்பெண் அவருடைய ஆலயத்திற்குச் சென்றார். அங்கு அவர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக அங்கிருந்த அத்தனைபேரும் அவர்மேல் அன்பைப் பொழிய, அவருடைய போக்கில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அவரும் மற்றவர்கள்மேல் அன்புசெலுத்த ஆரம்பித்தார். அன்பு என்பது ஒரு தெய்வீக இளம் துளிர். அது பரலோக வாசனையைப் பரிமளிக்கும் ஒப்பற்ற மலர். அன்பு ஆவியின் ஒன்பது கனிகளிலே மிகவும் சுவையான கனி.

நம் ஆண்டவருடைய அன்பை எண்ணிப்பாருங்கள். நாம் அவரில் அன்புகூருவதற்கு முன்பாக அவர் நம்மேல் அன்புகூர்ந்து நம்மைத் தேடி வந்தார். மற்ற மதங்களிலும், மார்க்கங்களிலும் மனுஷன்தான் தெய்வத்தை தேடித் திரிகிறான். ஆலயங்களிலும், புண்ணிய ஸ்தலங்களிலும் பரம்பொருளைத் தேடி அலைகிறான். ஆனால், கிறிஸ்தவ மார்க்கத்தில்மட்டுமே இறைவன் மனுஷனைத் தேடி வந்தார். இழந்துபோனதைத் தேடும்படி வந்தார். காணாமல்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்படியாக வந்தார்.

அவருடைய அன்பை அறியாத பேதுரு, யூதருக்கும் போர்ச்சேவகர்களுக்கும் பயந்து இயேசுவை மறுதலித்தபோதிலும், இயேசுவுக்கு பேதுருமேல் இருந்த அன்பு குறையவே இல்லை. மனதுருகி ஒரு பார்வை பார்த்தார். அந்த அன்பின் பார்வை பேதுருவை உணர்த்திற்று. இவ்வளவு அன்புள்ள தேவனை மறுதலித்துவிட்டேனே என்று சொல்லி குற்ற மனச்சாட்சியால் வாதிக்கப்பட்டு அவர் மனம் கசந்து அழுதார்.

தேவபிள்ளைகளே, மறுதலித்த பேதுருவையும் மீண்டும் சீஷனாக நிலை நிறுத்தி மாபெரும் அப்போஸ்தலன் ஆக்கினது இயேசுவினுடைய உன்னத அன்புதானல்லவா?

நினைவிற்கு:- “வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்” (1 யோவா. 3:18).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.