Appam, Appam - Tamil

மார்ச் 08 – தூக்கியெடுக்கும் அன்பு!

“பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி” (சங். 40:2).

கர்த்தர் நம்மேல் பாராட்டின அன்பு நம்மை பாவத்திலிருந்து வெளியே கொண்டுவருகிறது. உளையானச் சேற்றிலிருந்து தூக்கியெடுக்கிறது. அந்த அன்பு நம்மைத் தேடி வருகிற ஒரு அன்பு.

ஒரு ஆடு காணாமல்போகும்போது மேய்ப்பனுடைய உள்ளம் எவ்விதமாய் பரிதபிக்கும்! இரவு பகல் என்றும், வெயில் மழை என்றும் பாராமல் அந்த ஆட்டை எவ்வளவு கரிசனையோடு அவன் தேட முற்படுவான்! அந்த ஆடு முட்களிலே சிக்கிக்கொண்டிருக்கும் என்றால், தன்னுடைய கைகளிலே முள் குத்தினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு அந்த ஆட்டை விடுவிப்பான் அல்லவா?

ஆண்டவர் செலுத்துகிற அன்புகளில் விசேஷமானது நம்முடைய ஆத்துமாவைத் தூக்கியெடுக்கிற ஓர் அன்பாகும். பாதாளத்தின் பிடியிலும், சத்துருவின் வல்லமைகளிலிருந்தும் நம்மை மீட்டுக்கொள்ளுகிற அன்பு அது. ஆம், அவர் நம்மை பாதாளத்தின் வல்லமைகளிலிருந்து தூக்கியெடுக்க சித்தமானார்.

ஒருமுறை ஒரு நிலக்கரி சுரங்கத்தினுள் ஒரு நிலஅதிர்வு விபத்து நேரிட்டது. அநேக தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டார்கள். பலவகையான கயிறுகளைக் கொண்டுவந்து சுரங்கத்திலிருந்தவர்களைக் கட்டி வெளியேற்ற முயற்சித்தார்கள். அம்முயற்சிகளில் கயிறுகள் மீண்டும் மீண்டும் அறுந்துபோனதால் யாரையும் கட்டியிழுக்க முடியவில்லை. முடிவிலே அந்த சுரங்கத்தின் கண்காணிப்பாளர் ஒரு புதிய கயிறு ஒன்றைக் கொண்டுவந்தார். அந்த கயிற்றைக் கட்டி இழுத்தபோது முயற்சி வெற்றியடைந்தது. அநேகர் காப்பாற்றப்பட்டனர். அந்தக் கயிற்றினால்மட்டும் எப்படி அறுந்துபோகாமலிருக்கமுடிந்தது என்பதை ஆராயும்போதுதான் அக்கயிற்றினூடே இரும்புக்கம்பியும் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அதைப்போலத்தான், மற்ற எல்லா நேசங்களும் மறைந்தும், குறைந்தும், மாறியும்போனவையாக இருக்கையில் கர்த்தருடைய நேசம் மறையாததும், குறையாததும், மாறாததும், வலிமையானதுமாயிருக்கிறது.

கிறிஸ்துவினுடைய அன்பின் கயிறுக்குள்ளே அவருடைய இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அவருடைய கல்வாரி சிநேகம் கரைபுரண்டு ஓடுகிறது. அதுவே ஆத்துமாக்களை கர்த்தர் பக்கமாய் இழுத்துக்கொள்ளுகிறது. உளையான சேற்றிலிருந்து கர்த்தர் நம்மைத் தூக்கி எடுக்கும்போது அவர் நமக்காக இரத்தக்கிரயம் செலுத்தினார் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு பரலோகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அந்தக் கல்வாரி அன்பின் கயிறு ஒருபோதும் அறுந்துபோகாது. அன்பின் தேவன் உங்களை தன்னுடைய அன்பின் கயிறுகளினால் இணைத்திருக்கிறார். அவர் கரத்திலிருந்து ஒருவராலும் உங்களைப் பறித்துக்கொள்ள இயலாது. தேவபிள்ளைகளே, பழைய பாவங்கள் உங்களை மேற்கொண்டுவிடுமோ, சாத்தான் உங்களைப் பறித்துக்கொண்டு போய்விடுவானோ என்று ஒருபோதும் கலங்காதிருங்கள்! கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான கயிறு ஒருபோதும் அறுந்துபோகாது.

நினைவிற்கு:- “கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே, ஆகையால் தேவனுக்கு உடையவர்களாகிய நீங்கள் உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்” (1 கொரி. 6:20).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.