Appam, Appam - Tamil

பிப்ரவரி 27 – அமர்ந்திருங்கள்!

“நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் (சங். 46:10).

நீங்கள், உள்ளம் கொந்தளிக்கும்போதும், பலவிதமான கவலைகளினால் பீடிக்கப்படும்போதும், என்ன செய்வதென்று அறியாது கலங்கும்போதும், கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்திருங்கள். என்ன பேசினாலும் குற்றம், என்ன செய்தாலும் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிக்கிறவர்களின் மத்தியிலே நலமானதைக்கூடப் பேசாமல் அமர்ந்திருங்கள்.

நீங்கள் அமர்ந்திருக்கும்போது கர்த்தர் உங்களுக்காக வழக்காடி யுத்தம் செய்வார். நீங்கள் அமர்ந்திருக்கும்போது கர்த்தர் உங்களுக்காக வைராக்கியமாக எழுந்து நிற்பதைக் காண்பீர்கள்.

இன்று உங்களுக்கு விரோதமாக ஒரு புயல் வீசுகிறதா? கடல் கொந்தளிக்கிறதா? உங்களுடைய முயற்சிகளெல்லாம் வீண் என்று தோன்றுகிறதா? நீங்கள் கர்த்தருடைய சமுகத்தில் அமர்ந்திருங்கள். அப்பொழுது கர்த்தர் எழுந்திருந்து, “இரையாதே அமைதலாயிரு” என்று சொல்லி புயலையும், கடலையும் அதட்டி அமைதல்படுத்துவார்.

அன்று கலிலேயா கடலில் சீஷர்கள் பயணம் செய்துகொண்டிருந்தபோது வீசின புயலையும், கொந்தளித்த கடலையும் அப்படித்தான் அமரப்பண்ணினார். 18 மைல் நீளமும், 13 மைல் அகலமுமுள்ள அந்தக் கடலலைகள் அமைதியாக அடங்கிவிட்டன. புயல் அமர்ந்து தெய்வீக அமைதல் அங்கே நிலவியது.

பல பரிசுத்தவான்களுடைய அனுபவமும் அதுதான். ஊழியத்திற்கு விரோதமாக பிரச்சனைகளும் போராட்டங்களும் வரும்போது, அவர்கள் அமைதியாய் இரண்டு மூன்று தினங்கள் கர்த்தரோடு செலவழிக்கும்படி தனிமையில் சென்றுவிடுவார்கள். கர்த்தருடைய பாதத்தில் விழுந்து ஜெபிப்பார்கள். கர்த்தருக்குமட்டுமே தங்களுடைய துயரங்களையும் வேதனைகளையும் அறிவிப்பார்கள். பின்பு அவர்கள் கழுகைப்போல் புது பெலனடைந்து திரும்பிவரும்போது கர்த்தர் தங்களுக்காக யாவும் செய்து முடித்திருக்கிறதைக் காண்பார்கள்.

தங்களைத் தொடர்ந்து எகிப்தின் வீரர்கள் வருகிறார்களே, இரதங்களும் சேனைகளும் வருகின்றனவே, பார்வோன் என்ன செய்வானோ என்று இஸ்ரவேல் ஜனங்கள் கலங்கியபோது மோசே சொன்னது என்ன தெரியுமா? “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:13,14) என்று அவர் சொன்னார்.

நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்பதன் அர்த்தம் என்ன? அமர்ந்திருப்பீர்கள் என்பதே. அப். பேதுரு, அமர்ந்திருப்பதுடன் அடங்கியுமிருங்கள் என்று ஆலோசனை சொல்லுகிறார். “ஆகையால், ஏற்றக்காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” (1 பேது. 5:6).

தேவபிள்ளைகளே, நீங்கள் பேசாமல் அமர்ந்திருக்கும் நேரமானது துன்மார்க்கர் அவர்களுக்கு வரும் பலனைக் காண்கிற ஒரு நேரம். கர்த்தர் பலத்த பராக்கிரமசாலியாக எழுந்தருளுகிற ஒரு நேரம். அப்பொழுது கர்த்தரின் மகத்துவத்தையும் மகிமையையும் நீங்கள் காண்பீர்கள்.

நினைவிற்கு:- “இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்” (எரே. 30:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.