AppamAppam - Tamil

Mar 8 – மனங்கசந்து!

“கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே போய், மனங்கசந்து அழுதான்” (லூக். 22:61,62).

 தேவசமுகத்திலே மனங்கசந்து உங்களை தாழ்த்தி கண்ணீர் சிந்தும்போது, உங்களுடைய இருதயத்தின் பாரங்களெல்லாம் நீங்கிப் போகின்றன. துயரங்கள் நீங்கிப் போகின்றன. இங்கே பேதுருவின் கண்ணீரை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

முதலாவது, அது ஒரு குற்ற மனச்சாட்சியின் கண்ணீர். ஆண்கள் அழுவது அபூர்வம். அதிலும் பேதுருவைப் போல திடமானவர்கள் கண்ணீர் சிந்துவது என்பது ஆச்சரியமானதல்லவா? ஆம், பேதுருவின் உள்ளத்தை குற்ற மனச்சாட்சி பேதுருவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் கண்ணீர் விட்டு அழுதார். கிறிஸ்துவை அறியேன் என்று மாத்திரமல்ல, சபித்துக் கொண்டும், சத்தியம் பண்ணிக்கொண்டும் இருந்த பேதுருவை கிறிஸ்துவின் கண்கள் கூர்ந்து நோக்கிப் பார்த்தன. அந்த ஒரு பார்வை பேதுருவினுடைய இருதயத்தை உடைத்தது. குற்ற மனச்சாட்சி வாதிக்க ஆரம்பித்தது.

கர்த்தர் ஒரு மனுஷனுடைய உள்ளத்தில் வைத்திருக்கிற தெய்வீகக் குரல்தான் இந்த மனச்சாட்சியாகும். ஒருவன் துணிந்து பாவங்களை செய்துவிட்டால் அந்த குற்ற மனச்சாட்சி அவனுடைய இருதயத்தைக் குத்தி, புண்ணாக்கி, பிழிய ஆரம்பிக்கிறது. அநேகர் தொடர்ந்து பாவம் செய்து, மனச்சாட்சியை மழுக்கி விடுகிறார்கள். முடிவில் நித்திய வேதனையில் பங்கடைகிறார்கள்.

பேதுருவிடத்தில் மென்மையான மனசாட்சியிருந்தது. அது இருதயத்தில் குத்தியவுடனே, அவர் மனங்கசந்து அழுது உடனே கர்த்தரண்டை திரும்பினார். வேதம் சொல்லுகிறது: “காணிக்கைகளும் பலியும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியை பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபி. 9:9,14).

தாவீது பாவம் நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி அவருடைய பாவத்தை உணர்த்தினார். தாவீது உடனே தேவ சமுகத்தில் மன்றாடி கர்த்தருடைய இரக்கத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டார்.

இரண்டாவது, அது ஒரு பின்மாற்ற ஜீவியத்தின் கண்ணீர். பேதுருவினுடைய அழுகைக்கு இன்னொரு காரணம் பின்மாற்ற ஜீவியத்தினால் வந்த தோல்வியேயாகும். கெத்செமனேயில் இயேசு ஜெபிக்க சொன்னபோது, பேதுருவோ தூக்கக் கலக்கத்திலிருந்தார். ஜெபம் குறைவுபட்டபடியினாலே சோதனையை அவரால் எதிர்நிற்க முடியவில்லை. பேதுரு கிறிஸ்துவை தூரத்திலே பின்பற்றினார் என்றும், பிலாத்துவின் சேவகர்களோடு சேர்ந்து குளிர் காய்ந்துகொண்டிருந்தார் என்றும் வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, பேதுருவைப் போல நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தோடு கர்த்தரை நோக்கி மன்றாடுங்கள். அவர் நிச்சயமாகவே உங்கள் தோல்வியையெல்லாம் ஜெயமாக மாறப்பண்ணுவார்.

நினைவிற்கு:- “தேவனுக்கேற்ற துக்கம், பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல், இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது” (2 கொரி. 7:10).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.