AppamAppam - Tamil

Feb 28. யுத்தம் செய்யும் கர்த்தர்!

“கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவது போல் அந்த ஜாதிகளோடே போராடுவார்” (சகரி. 14:3).

கர்த்தர் உங்களுடைய பிதாவாயிருக்கிறார். பிள்ளைக்கு விரோதமாய் போராட்டம் வரும்போது, அந்தப் போராட்டத்தை தன்னுடையப் போராட்டமாகவே எண்ணி தகப்பனானவன் போராடுவான். அதைப்போலத்தான் கர்த்தரும் உங்களுக்காகப் போராடுவார்.

கர்த்தருடைய பெயர் “சேனைகளின் கர்த்தர்” என்பதாகும். அவருடைய சேனையில் ஆயிரமாயிரமான தேவதூதர்களுண்டு. ஆயிரமாயிரமான நட்சத்திரங்களுண்டு, ஆயிரமாயிரமான பரிசுத்தவான்களுண்டு.

வேதம் சொல்லுகிறது, “யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்” (யோசுவா 5:13,14). கர்த்தரைத் தன்னுடைய துணையாய் கொண்டிருக்கும் மனுஷன் பாக்கியவான். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்ய நீங்கள் அவர் பின்னால் செல்லுவது எத்தனை பாக்கியமான அனுபவம்!

தாவீது ராஜா தன்னுடைய ஒவ்வொரு யுத்த நேரத்திலும், கர்த்தர் தன்னோடிருக்கிறதை உணர்ந்தார். அந்த விசுவாசம் அவரைப் பலப்படுத்தியது. வேதம் சொல்லுகிறது, “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்” (சங். 46:11).

தேவபிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாய் எந்தப் போராட்டம் வந்தாலும், அந்தப் போராட்டத்தை கர்த்தருடைய கரத்தில் ஒப்புவித்துவிடுங்கள். அது கர்த்தருடைய போராட்டமாக, கர்த்தருடைய யுத்தமாக மாறட்டும். “கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (யாத். 14:14).

கர்த்தர் உங்களுடைய பட்சத்திலே இருப்பாரென்றால் உங்களுக்கு விரோதமாய் எந்த மனுஷன் எழும்ப முடியும்? எந்த அரசியல்வாதியால் எழும்ப முடியும். “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோம. 8:31) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தரை முற்றிலும் சார்ந்து கொள்ளுங்கள். போராட்ட நேரங்களில் உங்கள் பாரங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கர்த்தர்மேல் வைத்துவிட்டு, அவர் உங்களுக்காக போராடும்படி இடங்கொடுங்கள்.

வேதம் சொல்லுகிறது, “நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (யோசு. 1:5).

தேவபிள்ளைகளே, உங்களை எப்போதும் கர்த்தரோடு இணைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களோடிருக்கிறதை உறுதி செய்து கொள்ளுங்கள். அவருக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு பிரியமானதை நீங்கள் செய்யும்போது, நிச்சயமாகவே அவர் உங்களை உயர்த்துவார். ஒருவனும் உங்களை எதிர்த்து நிற்பதில்லை.

நினைவிற்கு:- “கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை” (யோசு. 23:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.