bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
AppamAppam - Tamil

Feb 9 – பலியாக மாறின புறாக்கள்!

“கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப் புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டு போனார்கள்” (லூக். 2:24).

புறாக்கள் பலி செலுத்தப்பட தகுதியுள்ள ஒரு சுத்தமான பறவை. பெரிய காளையோ, ஆட்டையோ பலி செலுத்த திராணியில்லாத ஏழை மக்கள் புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டு வந்து தேவாலயத்தில் பலியாக செலுத்துவார்கள் (லேவி. 12:8). இயேசு கிறிஸ்து பிறந்த எட்டாம் நாளிலே, நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளின்படி இயேசுவுக்கு பலியாக, காணிக்கையாக செலுத்த மரியாளும் யோசேப்பும் இரண்டு ஜோடி காட்டுப்புறாக்குஞ்சுகளைக் தேவாலயத்திற்கு கொண்டு வந்தார்கள்.

ஒருவேளை அந்த புறாக்குஞ்சுகள் என்ன எண்ணியிருந்திருக்கக்கூடும்? நாங்கள் காளைகளைப்போல பெரிதானவர்கள் அல்ல, ஆடுகளைப்போல அழகானவர்களும் அல்ல, நாங்கள் பெலவீனமான பறவைதானே, மிகவும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட புறாக்கள் தானே, எங்களுக்கு மேன்மைப் பாராட்ட என்ன இருக்கிறது என்று எண்ணியிருந்திருக்கக்கூடும். ஆனாலும் அந்த புறாக்களின் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சி. பாவிகளுக்காக தம்முடைய மாசற்ற இரத்தத்தை சிந்தி, உலகத்தில் தன் ஜீவனைக் கொடுக்கும்படியாக வந்திருக்கும் இந்த தேவகுமாரனுக்கு பலியாக மரிக்கும்படியாக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டிருக்கக்கூடும்.

 இயேசு கிறிஸ்துவும்கூட இந்த உலகத்திற்கு பலியாகத்தானே வந்தார்? எல்லா மனுஷருக்காகவும் தம்மைத்தாமே பலியாகக் கொடுத்தார். பலியாக மரிப்பது என்பது சாதாரணமானதல்ல. அதற்கு திடமும், தைரியமும் வேண்டும். உள்ளான மனுஷனிலே பெலன் வேண்டும். அந்த பெலனையும், வல்லமையையும் கொடுக்கத்தான் புறாவைப்போல ஆவியானவர் அவர்மேல் இறங்கி தங்கியிருக்க வேண்டியது அவசியமாயிருந்தது.

வேதம் சொல்லுகிறது, “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபி. 9:14). பிராயச்சித்த பலியாக தன்னை அர்ப்பணிப்பதற்கு பரிசுத்த ஆவியானவர் அவருக்கு உதவி செய்தார். சிலுவையை சுமப்பதற்கு, நிந்தைகளையும் அவமானங்களையும் சகிப்பதற்கு, தாங்கொண்ணா வேதனையை சரீரத்தில் ஏற்றுக் கொள்ளுவதற்கு ஆவியானவருடைய ஒத்தாசை அவருக்கு தேவையாய் இருந்தது.

ஒருவேளை இன்று நீங்கள் பலவிதமான உபத்திரவங்களின் வழியாக, நிந்தைகள், அவமானங்கள் வழியாக செல்லவேண்டியதிருக்கக்கூடும். அதை சகிப்பதற்கு, வான்புறாவான ஆவியானவரின் ஒத்தாசையைக் கேளுங்கள். சிலுவைச் சுமப்பதற்கு நிச்சயமாகவே வான்புறாவின் பெலன் அவசியம். ஓட்டத்தை கடைசிவரை வெற்றியோடு ஓடி முடிக்க உன்னத பெலன் அவசியம். தேவபிள்ளைகளே, பரிசுத்த ஆவியின் வல்லமையினால் நீங்கள் வெற்றியின் பாதையில் முன்னேறிச் செல்லுவீர்களாக!

நினைவிற்கு:- “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” (ரோமர். 8:36).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.