No products in the cart.
Feb 04 – பரீட்சையிலும் சந்தோஷம்!
“உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக். 1:3).
”பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்கு, “பரீட்சை” என்றால் அது பயத்தை ஏற்படுத்தும் ஒரு அனுபவமாயிருக்கிறது. கஷ்டப்பட்டு பாடங்களைப் படிக்க வேண்டும். ஞாபகத்தில் அவைகளை நிறுத்த வேண்டும். எதிர்பார்க்கிற கேள்விகள் பரீட்சையில் வரவேண்டும். அப்படி சரியாக செய்யாவிட்டால் மனம் மிகுந்த வேதனைப்படும். ஆகவே பரீட்சை அவர்களுக்கு ஒரு சந்தோஷமான அனுபவமாக இருப்பதில்லை.
அதே நேரத்தில் அந்த பரீட்சையானது, அவர்கள் உயர்ந்த வகுப்பிற்கு செல்லுவதற்கு ஏணிப்படியாக அமைகிறது என்று எண்ணுவார்களானால், அது சந்தோஷத்தைக் கொடுக்கும். பரீட்சையில் நல்ல மார்க் எடுத்தால் அவர்களுக்கும் சந்தோஷம். பெற்றோருக்கும், கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கும் சந்தோஷம். ஆகவே குறிக்கோளை முன்னாக வைத்து அதை அடைய பிரயாசப்படும்பொழுது அது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஆவிக்குரிய பரீட்சை நேரங்களில் அதன் மூலம் வரப்போகிற மகிமையைக் குறித்து எண்ணி, நீங்கள் சந்தோஷத்துடன் கர்த்தரைத் துதிப்பீர்களாக.
வேதம் சொல்லுகிறது, “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:2). இயேசு கிறிஸ்துவின் கண்கள் பரீட்சைக்கு அப்பாலிருக்கும் சந்தோஷத்தைக் கண்டது. ஆகவே அவர் சிலுவைப் பாடுகளை மகிழ்ச்சியுடன் சகித்தார்.
விஞ்ஞானியான எடிசனுடைய மந்தமான செவியும், கவிஞனான மில்டனுடைய பார்வையற்ற விழிகளும், பக்தனான ஜான் பனியனுடைய சிறைவாசமும் பெரிய பரீட்சைகள்தான். ஆனால் அந்த பரீட்சைகளானது, அவர்களுக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்தது. அதனால் அவர்கள் தங்களுக்கு மாத்திரமல்ல, மற்றவர்களுக்கும் பயன் தருகிற பாத்திரமாய் மாறினார்கள்.
சில நேரங்களில் நீங்களும்கூட, “ஏன் இந்த பரீட்சைகள் என்றும், பரீட்சைகள் இல்லாமலேயே முன்னேறலாமே” என்றும் எண்ணலாம். உதாரணமாக: ஒரு சிறுவன் பட்டம் ஒன்றை பறக்க விடுகிறான். அது உயரப் போனதும் “ஏன் கீழேயிருக்கிற பையன் கயிற்றை பிடித்து என்னைக் கட்டுப்படுத்துகிறான்? அந்த கயிற்றை அவன் விட்டு விட்டால் நான் இன்னும் உயரமாக பறந்து சந்திரனையே பிடித்திருப்பேனே” என்று எண்ணியது. அடுத்த நிமிடம் தற்செயலாக அந்த பையன் கயிற்றை நழுவவிட்டு விட்டான். இமைப்பொழுது அந்த பட்டம் சந்தோஷத்தை அனுபவித்தாலும் மறுவினாடி ஒரு மரத்தின் கிளையில் சிக்கிக் கொண்டது. எத்தனை பரிதாபமான முடிவு அதற்கு!
தேவபிள்ளைகளே, உங்களுடைய வாழ்க்கையில் பரீட்சைகள் வரலாம். ஆனால் நீங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கிற வரையிலும் உங்களுக்குப் பாதுகாப்பு உண்டு. அவருடைய கரத்திலிருக்கும்போது, பரீட்சைகள் முடிந்த பிறகு, நீங்கள் பொன்னாக விளங்குவீர்கள்.
நினைவிற்கு:- “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12).