No products in the cart.
Jan 29 – செய்வதெல்லாம்!
“அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங்.1:3).
சிலர் செய்வதெல்லாம் வாய்க்கிறது. சிலர் செய்வதோ, ஒன்றுமே வாய்ப்பதில்லை. இதற்கு காரணம் என்ன? சிலர், “எதைச் செய்தாலும் எங்களுக்கு தடையாக இருக்கிறது. ஏன் எங்களுடைய காரியம் எதுவும் வாய்க்கவில்லை” என்று கேட்கிறார்கள்.
அவர்கள் வேதத்தை மறந்ததுதான் இதன் காரணமாய் இருக்கிறது. வேதத்தை வாசிக்க விரும்பவில்லை. தியானிக்க நேரத்தை ஒதுக்கவில்லை. கர்த்தருக்கு முதலிடம் கொடுக்காமல் உலகப் பிரச்சினைகளுக்கு முதலிடம் கொடுத்ததினாலேதான் அவர்கள் செய்தது வாய்க்கவில்லை.
வேதம் சொல்லுகிறது: “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (சங். 1:2,3).
வேடிக்கையான கதை ஒன்று உண்டு. ஒரு முறை ஒரு கிராமத்திலிருந்து ஒருவர் பட்டணத்திற்கு வந்து விலைமதிப்புடைய குடை ஒன்றை வாங்கினார். கடையை விட்டு வெளியே வரும்போது அடை மழை பிடித்துக் கொண்டது. குடையை எப்படி திறந்து பிடிப்பதென்று அவருக்கு தெரியவில்லை. தலையிலே ஒரு துணியை போட்டுக் கொண்டு, மழையில் நனைந்தபடியே வெளியே ஓடினார். சிலர் அவரைப் பார்த்து சிரித்தார்கள். சிலர் அனுதாபம் கொண்டார்கள். கடைக்காரன் இரக்கப்பட்டு, அவருக்குப் பின்னால் ஓடி அவருடைய குடையை விரித்து அதை உபயோகப்படுத்த சொல்லிக் கொடுத்தான்.
இதே போலத்தான் அநேகர் கைகளிலே வேத புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். வேதத்திலுள்ள வாக்குத்தத்தங்களை எப்படி பயன்படுத்துவது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. பிரச்சனைகளும், துன்பங்களும் அலைமோதும்போது அதை சந்திக்க திராணியற்றவர்களாய் துக்கத்தோடு தங்கள் காலத்தைக் கடத்துகிறார்கள். கர்த்தர் தம்முடைய மகத்துவத்தை வேதத்திலே எழுதிக் கொடுத்திருக்கிறார். அதை ஒருபோதும் நீங்கள் அந்நிய காரியமாக எண்ணவே கூடாது.
தாவீதின் வாழ்க்கையைப் பாருங்கள்! “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்று எழுதியிருந்தபடியே தாவீது செய்ததையெல்லாம் கர்த்தர் வாய்க்கப்பண்ணினார். தாழ்மையான ஒரு இடத்திலிருந்து, இஸ்ரவேலரை நாற்பது வருடங்கள் அரசாளுகிற மேன்மையான ஸ்தானத்திற்கு உயர்த்தினார். காரணம், அவர் வேதத்தின் மேல் வைத்திருந்த அன்பும், வேத வாசிப்பும், தியானமும்தான்.
தாவீது சொல்லுகிறார், “நான் உமக்கு விரோமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” (சங். 119:11,13,14,16).
நினைவிற்கு:- “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” (சங். 119:105).