No products in the cart.
Jan 28 – சுத்திகரிக்கும் நதி!
“பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறதை எனக்குக் காண்பித்தான்” (வெளி. 22:1).
நதியினுடைய ஒரு குணாதிசயம் அழுக்கையும், அசுத்தங்களையும் அடித்துச் சென்று சுத்திகரிக்கும் தன்மையாகும். அது பாயும் இடங்களிலெல்லாம் பெரிய சுத்திகரிப்பு உண்டாகிறது. தண்ணீருக்கு சுத்திகரிக்கும் தன்மையுண்டு. ஆற்றிலே போய் குளித்துவிட்டு வரும்போது, புத்துணர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாமல், சரீரமும் சுத்திகரிக்கப்படுகிறது.
பாவநிவர்த்தி செய்யும் நாளிலே பிரதான ஆசாரியனும்கூட, தான் பரிசுத்த வஸ்திரம் அணிந்து கொள்ளுவதற்கு முன் தண்ணீரில் குளிப்பாட்டப்பட வேண்டியதிருந்தது. அவனுக்கு பணிவிடை செய்கிறவரும் அப்படியே செய்ய வேண்டியிருந்தது (லேவி. 16:4,26,28).
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுடைய கால்களைக் கழுவினபோது இரண்டு விதமான சுத்திகரிப்புகளைக் குறிப்பிட்டார். இயேசு சொன்னார், “முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்” (யோவான். 13:10). கல்வாரியின் இரத்தம் உங்களைச் சுத்திகரித்து, கழுவி தூய்மை நிலைமைக்கு கொண்டு வருகிறது. அதே நேரம், ஒவ்வொரு நாளும் நீங்கள் ஆவியிலே நிரப்பப்படும்போது, உங்களை சுத்தமாக காத்துக்கொள்ள உதவுகிறது.
ஒரு ராஜாவுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையில் மூவாயிரம் மாடுகள் இருந்தன. பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தப்படாமல் இருந்த அந்த இடத்தைப் பார்த்து ராஜா கோபமடைந்தார். அந்த தேசத்திலுள்ள ஒரு பெரிய பலசாலியை அழைத்து, ஒரே நாளிலே இதை நீ எனக்கு சுத்தம் பண்ணிக்கொடுக்க வேண்டுமென்று சொன்னார். ஆனால் உண்மையில் ஆயிரம்பேர் சேர்ந்து ஆயிரம் நாட்களாக சுத்தகரித்தாலும், அதை செய்வது மிகவும் கடினம் என்பதால் அந்த பலசாலி தீவிரமாய் யோசித்தான்.
அவன் அக்கம் பக்கத்தில் சுற்றி நடந்தபோது, ஒரு மேட்டிலிருந்து ஒரு நதி புறப்பட்டு ஓடுகிறதைக் கண்டான். தன்னால் அந்த இடத்தை சுத்தம் பண்ண முடியாது என்பதையும் இந்த நதியை பண்ணை இருக்கும் பக்கமாய் திருப்பிவிட்டால் ஒரே நாளில் அழுக்கையெல்லாம் அடித்துக் கொண்டு போய்விடும், இடம் மிகவும் சுத்தமாகிவிடும் என்றும் உணர்ந்தான்.
அவன் அந்த நதி வழக்கமாய் போகிற இடத்தை அடைத்து, மாடுகள் இருந்த பக்கமாய் திருப்பிவிட்டபோது, நதியின் தண்ணீர் வேகமாய் பாய்ந்து, தேங்கியிருந்த சாணங்கள், அழுக்குகள் எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய்விட்டது. மட்டுமல்ல, நதியினுடைய புதிய மணல் அந்த இடத்தை நிரப்பிற்று.
இன்று பரலோகத்திலிருந்து ஒரு ஜீவ நதி உங்களிலுள்ள அழுக்குகள், பாவக்கறைகள் மற்றும் பல ஆண்டுகளாய் இருளடைந்த நிலைமைகளை மாற்றுவதற்காக உங்களுக்குள் வருகிறது. தேவபிள்ளைகளே, அந்த அபிஷேக நதியினால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தத்தின்மேல் பரிசுத்தமடைவீர்களாக.
நினைவிற்கு:- “தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்” (சங். 65:9).