No products in the cart.
Jan 26 – சுதந்தரம்!
“நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்” (எரே. 17:4).
கர்த்தர் ஏதேனிலே, மனுஷனுக்கு எல்லாவற்றையும் சுதந்தரமாய்க் கொடுத்தார். புல், பூண்டு, மரம், விருட்சம், கனிவகைகளைக்கூட சுதந்தரமாகக் கொடுத்தார். ஆகாயத்திலே பறக்கிற பறவைகள், பூமியிலே நடமாடுகிற மிருக ஜீவன்கள், கடலிலே நீந்துகிற மீன்கள் எல்லாவற்றையும் மனுஷனுக்கு சுதந்தரமாய்க் கொடுத்தார். ஏதேன் தோட்டத்திலிருந்த ஜீவ விருட்சம், அங்கே ஓடின நதி எல்லாவற்றையும் அவன் அனுபவித்தான்.
ஆனால், அவன் பாவம் செய்தபோதோ, தன் சுதந்தரத்தை இழந்தான். ஆளுகையையும், அதிகாரத்தையும் இழந்தான். ஏதேனில் மனிதன் இழந்த சுதந்தரத்தை எப்படி மீண்டும் பெற்றுக்கொள்வது? வேதம் சொல்லுகிறது, “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக் கொள்ளுவான்” (வெளி. 21:7) ஆம், நீங்கள் ஜெய ஜீவியம் செய்தால் சுதந்தரவாளியாக மாறலாம். நீங்கள் ஜெய ஜீவியம் செய்ய வேண்டுமென்றால் முதலாவது, இந்த உலகத்தை, மாம்சத்தை, பிசாசை ஜெயிக்க வேண்டும்.
“…ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்” (வெளி. 12:11). இயேசு கிறிஸ்து கல்வாரிச் சிலுவையிலே வலுசர்ப்பத்தின் தலையை நசுக்கி ஜெயங்கொண்டார். அவருடைய பாதங்களிலே சிந்திய இரத்தம் சாத்தானின் மேல் ஜெயத்தைக் கொடுத்தது. நீங்களும் அந்த இரத்தத்தினாலே ஜெயம் பெறுவீர்களாக.
பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட வீட்டிலே சங்கார தூதனுக்கு அதிகாரமில்லை. அப்படியானால், ஆவிக்குரிய பஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்களுடைய மனசாட்சியிலே தெளிக்கப்பட்டிருக்குமென்றால் அதனாலே நீங்கள் ஜெயமெடுக்க முடியும். ஆட்டுக்குட்டியின் இரத்தம் மட்டுமல்ல, சாட்சியின் வசனமும் உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கிறது. தேவனுடைய வசனமே சாத்தானை ஜெயிக்கிற வல்லமையான ஆயுதம். கர்த்தருடைய வார்த்தைகளே ஆவியின் பட்டயமாக விளங்குகிறது. ‘எழுதியிருக்கிறதே எழுதியிருக்கிறதே’ என்று இயேசு சொல்லி சாத்தானுடைய ஒவ்வொரு சோதனை மேலும் ஜெயம் எடுத்தார்.
நீங்கள் எப்படியாகிலும் சுதந்தரத்தை மீண்டும் பெற்றேயாக வேண்டியிருக்கிறது. இந்த சுதந்தரத்திற்கு விரோதமாக சாத்தான் போராடும்போது, ஆவியானவர் நிச்சயமாகவே உங்களுக்கு துணை நிற்கிறார். வெள்ளம் போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார் (ஏசா. 59:19). இயேசுவின் நாமத்தினாலே ஜெயமெடுப்பீர்களாக. சுதந்தரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுவீர்களாக.
அப். பேதுரு, “…நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்” (1 பேது. 3:9) என்று எழுதுகிறார். ஆசீர்வாதத்தை சுதந்தரியுங்கள். நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரியுங்கள் (1 பேது. 3:7). ராஜ்யங்களை சுதந்தரியுங்கள் (யாக். 2:5). இரட்சிப்பை சுதந்தரியுங்கள் (எபி. 1:14). தேவன் உங்களுக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற ஒவ்வொன்றையும் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” (சங். 37:11).