AppamAppam - Tamil

Dec 20 – விளக்கை ஏற்றுவீர்!

“தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்ச மாக்குவார்” (சங்.18:28).

 “என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே; என் இருள் வெளிச்சமாகட்டும் அப்பா; என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க உதவி செய்யும்” என்று தாவீது அன்போடு கர்த்தரிடத்தில் வேண்டுதல் செய்வதை இந்த பகுதியில் வாசிக்கலாம். ‘தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்’ என்று ஜெபிப்பது எத்தனை அருமையாய் இருக்கிறது! பெரிய தொழிற்சாலைகளை ஜனாதிபதியோ அல்லது மந்திரிகளோ வந்து திறந்து வைக்கும்போது அங்கே விளக்கு ஏற்றுகிறார்கள். அந்த விளக்கினால் தொழிற்சாலை முழுவதும் வெளிச்சம் பரவுகிறது. அப்போது அவர்கள் கை தட்டி ஆரவாரிக்கிறார்கள். வெளிச்சம் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தின் ஆரம்பத்திற்கு அடையாளமாக விளங்குகிறது. மனிதன் இருளை நீக்குவதற்கு பலவகையான விளக்குகளை கண்டுபிடித்தான். மிருகங்களின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிற விளக்குகளைக் கண்டுபிடித்தான். மெழுகுவர்த்திகளைக் கண்டுபிடித்தான். மண்ணெண்ணெய் விளக்குகளை கண்டுபிடித்தான். தற்போது மின்சார விளக்குகள் இருளை நீக்கி ஒளி கொடுக்கின்றன. தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தரை நோக்கிப் பாருங்கள். அவர் முழு உலகத்திற்கும் ஒளி கொடுக்க தீர்மானித்தார். ஆதியிலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது. உலகம் முழுவதையும் இருள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததை கர்த்தர் கண்ட போது ‘வெளிச்சம் உண்டாகக்கடவது’ என்றார். விளக்கை ஏற்றினார். வெளிச்சம் தர அவர் நியமித்த விளக்குகள் சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களுமா இருந்தன. அந்த விளக்குகள் உலகத்திலுள்ள காரிருளை அகற்றி, வெளிச்சத்தைக் கொடுக்கின்றன.

ஆனால், தாவீது ஜெபிக்கிற ஜெபத்தைப் பாருங்கள். “என் விளக்கை ஏற்றுவீர்” என்று தன்னுடைய உள்ளமாகிய விளக்கைக் குறித்துச் சொல்லுகிறார். பாவ இருள் உள்ளத்தை சூழ்ந்து கொள்ளும்போது ஆத்துமாவில் அந்தகாரம் சூழ்ந்து கொள்ளுகிறது. தோல்வியின் இருளும், சாபங்களின் இருளும், உள்ளத்தை கவ்விப் பிடிக்கின்றன.

எந்த ஒரு மனுஷன் பாவத்திலும் அக்கிரமத்திலும் வாழுகிறானோ, அவன் நீதியின் சூரியனாகிய கர்த்தரை விட்டுத் தூரம் விலகிப்போய் விடுகிறான். அவனுடைய வாழ்க்கையை இருள் பற்றிப் பிடிக்கிறது. வேதம் சொல்லுகிறது, “உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது” (ஏசா. 59:2).

 தேவபிள்ளைகளே, நீதியின் சூரியனாகிய கர்த்தரை உங்களது பாவங்களினாலே மறைத்துக் கொள்ளும்போது தேவனுடைய வெளிச்சம் உங்கள் வாழ்க்கையிலே வீச முடியாதபடி இருள் உங்களை சூழ்ந்து கொள்ளுகிறது. “என் விளக்கை ஏற்றும்” என்று நீங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்து, உங்களுடைய பாவங்களை நீங்கள் அறிக்கையிட்டு கர்த்தரிடத்தில் ஒப்புரவாக வேண்டியது அவசியம்.

நினைவிற்கு:- “மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்” (நீதி.20:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.