No products in the cart.
Nov 17 – சாட்சிகளாய் இருப்பீர்கள்!
“நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” (யோவா. 15:27).
“நீங்களே எனக்கு சாட்சிகள்” என்று இயேசுகிறிஸ்து அன்போடு சொல்லியிருக்கிறார். அவர் உங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு. உயிர்த்தெழுந்தார். இதற்கு நீங்கள் சாட்சிகள், இயேசு இன்றைக்கும் ஜீவிக்கிறார், இன்றைக்கும் அற்புதங்களைச் செய்கிறார் என்பதற்கு நீங்கள் சாட்சிகள். உங்களுக்கு விலையேறப்பெற்ற இரட்சிப்பை தந்த இயேசுவைக் குறித்து சாட்சி பகர்வதற்கு வெட்கப்படாதேயுங்கள். கர்த்தருக்காக சாட்சி கொடுக்க ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை தவற விட்டுவிடாதேயுங்கள்.
டிக்க்ஷனரி ஜான்சன் என்றழைக்கப்பட்ட சாமுவேல் ஜான்சன் என்றும் பெயர் பெற்ற மிக சிறந்த கல்விமானைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தகப்பனார் பழைய புத்தகங்களை எல்லாம் கட்டி, தலையிலே வைத்து சந்தைக்கு எடுத்துக் கொண்டுபோய் விற்று அதில் கிடைக்கிற பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
ஒரு நாள் அவருக்கு கடுமையான ஜுரம் வந்தது. ஆகவே தன் மகனாகிய ஜான்சனை அழைத்து, மகனே ‘இன்றைக்கு என்னால் சந்தைக்கு செல்ல முடியவில்லை. கடுமையான ஜுரம் இருக்கிறது. நீ இன்றைக்கு இந்த புத்தகங்களை சந்தைக்குக் கொண்டுபோய், நல்ல விலைக்கு விற்று பணத்தைக் கொண்டுவா’ என்று சொன்னார்.
வாலிபனாயிருந்த ஜான்சனுக்கு அப்பாவுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை. அதே நேரம் சந்தையில் போய் விற்றால் தன்னோடு படிக்கிற நண்பர்கள் கேலி செய்வார்கள் என்கிற வெட்கம். தன் தகப்பனிடம் போகிறேன் என்று சொல்லியும் வெட்கம் காரணமாக ஜான்சன் போகாமல் இருந்துவிட்டார். இதை அறிந்த தகப்பனார் அந்த கடுமையான ஜுரத்திலும் புத்தகங்களை தலையின் மேல் சுமந்துகொண்டு தள்ளாடியபடியே நடந்து சென்றார். அன்று கிடைத்த காசைக் கொண்டு ரொட்டி வாங்கி ஜான்சனுக்கும், மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தார். கொஞ்ச நேரத்தில் ஜுரம் இன்னும் அதிகமானது. ஜுரத்தின் கொடுமை உச்சத்துக்கு சென்றதால் அகோரத்தை தாங்க முடியாத அவர் துடித்து துடித்து மரித்துப்போனார்.
இது ஜான்சனின் உள்ளத்தை உடைத்தது. நடந்த காரியத்தை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த காட்சியை நினைத்து பல மாதங்கள் அழுதார். முடிவில் ஒருநாள் தன் தலையிலே புத்தகங்களை சுமந்து கொண்டுபோய் அந்த சந்தையின் வீதிகளிலே வைத்து விற்க ஆரம்பித்தார். எல்லாரும் அவரைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, ‘ஜான்சன் ஏன் இப்படி புத்தகம் விற்கிறார்’ என்று கேட்டார்கள். அதற்கு ஜான்சன் கண்ணீரோடு ‘இது என்னுடைய பிராயச்சித்தம். என் தகப்பனாருக்கு நான் செய்த கொடுமையை மாற்றும்படி வெட்கத்தையும், கேவலத்தையும் துறந்து நிந்தையை சுமக்க ஆயத்தமானேன்’ என்றார்.
உங்களுக்காக சிலுவை சுமந்த இயேசு கிறிஸ்துவுக்காக சாட்சி பகர நீங்கள் ஒருபோதும் வெட்கப்படாதேயுங்கள். “நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கமடையேன். பேரன்பைக் குறித்து ஆண்டவா நான் சாட்சி கூறுவேன்” என்று பக்தன் பாடுகிறான். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்கு சாட்சியாக விளங்க வேண்டும்.
நினைவிற்கு:- “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்” (அப். 2:32).