No products in the cart.
மே 02 – வியாதியின்மேல் ஜெயம்!
“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத். 15:26).
தேவனுடைய பிள்ளைகள் வியாதிகளின்மேல் ஜெயங்கொள்ளவேண்டுமென்று கர்த்தர் பிரியப்படுகிறார். நம்முடைய சரீரம் கர்த்தரால் உருவாக்கப்பட்டது என்பதாலும், சரீரத்தின் நோய்களையும், பெலவீனங்களையும் கர்த்தர் சிலுவையிலே சுமந்து தீர்த்துவிட்டபடியினாலும் நாம் வியாதியோடு தத்தளிக்கவேண்டிய அவசியமில்லை. வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டு ஜெயங்கொள்ளுவோமாக!
‘உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக’ என்று சொல்லி நாம் ஜெபிக்கிறோம். பரலோகத்திலே வியாதியும், நோயும் கிடையாது.
இயேசுவானவர் பூமியில் இருந்த நாட்களில் வியாதியின்மேல் ஜெயங்கொண்டவராகவே வாழ்ந்தார். அவருடைய சுவிசேஷ ஊழியம், ஜெப ஊழியம், உபவாச ஊழியம் ஆகியவை வியாதியினாலேயோ, பெலவீனத்தினாலேயோ ஒருநாளும் தடைப்பட்டதில்லை. வியாதிகள் அவரை மேற்கொள்ளவில்லை என்பதே அதன் காரணம். குஷ்டரோகியின்மேல் கூசாமல் தன் கைகளை நீட்டி தொட்டார். குஷ்டரோகம் அவரை மேற்கொள்ளவில்லை. இயேசுகிறிஸ்து நம்முடைய பெலவீனங்களையும் நோய்களையும் தாமே சுமந்துத் தீர்க்கச் சித்தமானார்.
ஏன் தேவனுடைய பிள்ளைகளுக்கு வியாதிகள் வருகிறது என்று நீங்கள் ஒருவேளை கேட்கலாம். வியாதி வருவதின் முக்கிய காரணம் பாவம்தான். திமிர்வாதக்காரனை இயேசுவண்டை கொண்டுவந்தபோது அவனை குணமாக்குவதற்கு முன்பாகவே இயேசு அவனைப் பார்த்து, ‘மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது’ என்றார் (மத். 9:1-6). அதுபோலவே பெதஸ்தா குளத்தண்டையில் முப்பத்தெட்டு வருஷங்கள் வியாதியாய் இருந்த மனுஷனை சுகமாக்கும்போது இயேசுவானவர் அவனைப் பார்த்து, ‘இதோ, நீ சொஸ்தமானாய் அதிக கேடானது இனி உனக்கு வராதபடி பாவம் செய்யாதே’ என்று கூறினார்.
சில வேளைகளிலே பெற்றோர் மற்றும் முற்பிதாக்களின் பாவங்களினாலும், சாபங்களினாலும்கூட வியாதிகள் வருவதுண்டு. இதை அநேகர் நம்பாமல் இருக்கக்கூடும். ஆனால், இராஜாவாகிய தாவீது பாவம் செய்தான் என்றும், அவனுடைய பாவத்தினிமித்தம் தேவன் அவனுடைய பிள்ளையை அடித்தார் என்றும், அது வியாதிப்பட்டு கேவலமாயிருந்தது என்றும் வேதத்தில் காண்கிறோம் (2 சாமு. 12:14,15).
ஆகவே அப்படிப்பட்ட வேளைகளில் நாம் நம்மைநாமே ஆராய்ந்து பார்த்து, “மற்றவர்களுக்கு வியாதி ஏற்பட நான் காரணமாய் இருந்திருக்கிறேனா?” என்று ஆராய்ந்து அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுவது நல்லது. வேதம் சொல்லுகிறது, “நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, …. ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” (யாக். 5:16).
சிலர் பேராசையினாலும், பண ஆசையினாலும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். எலியாவின் வேலைக்காரனாயிருந்த கேயாசியைப் பாருங்கள். பணம் சம்பாதிக்கும்படி நாகமானுடைய இரதத்தின்பின்னால் ஓடிப்போய் துணிகரமாய் பொய் சொன்னான். முடிவில் அவனுக்கும், அவனுடைய சந்ததிக்கும் குஷ்டரோகம் வந்தது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது என்று வேதம் நம்மை எச்சரிக்கவில்லையா? தேவபிள்ளைகளே, பாவம் உங்களை நெருங்காதபடி காத்துக்கொண்டால் வியாதிகள் உங்களை நெருங்குவதில்லை.
நினைவிற்கு:- “அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்” (மத். 8:17).
