Appam, Appam - Tamil

ஜூலை 01- தரிசிப்பவன்!

“நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்” (சங்.17:15).

“நானோ” என்று சொல்லி தாவீது மற்றவர்களைவிட்டு தன்னை வேறுபிரித்து தன்னுடைய உறுதியான நம்பிக்கையை விசுவாச வார்த்தைகளினால் முழங்குகிறார். ஆம் நீதியில் கர்த்தருடைய முகத்தைத் தரிசிப்பதும், கர்த்தருடைய சாயலால் திருப்தியாவதுமே அவரது நம்பிக்கையாயிருந்தது.

மூடி பக்தனின் நாட்களில் ஃபேன்னி கிராஸ்பி என்ற ஒரு அம்மையார் இருந்தார். அவர்கள் சுவிசேஷப் பாடல்களை எழுதுவதிலும், இசையமைத்துப் பாடுவதிலும் மிகவும் திறமைசாலி. சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அருமையான சுவிசேஷ கீதங்களை இந்த அம்மையார் இயற்றியிருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய விசேஷம் என்னவென்றால் அவர்களுக்கு கொஞ்சமும் கண் தெரியாது என்பதுதான். அவ்வளவு பெரிய குறை இருந்தும் அவர்கள் மனம் சோர்ந்துபோகவில்லை. பாடல்கள் மூலமாகவும், இசை மூலமாகவும், ஆத்துமாக்களை ஆண்டவரண்டை அழைத்துவரவேண்டும் என்பதில் அவர்கள் வைராக்கியமாய் இருந்தார்கள்.

ஒருநாள் நான் பரலோகத்திற்கு போகும்போது என் கண்கள் திறக்கப்படும். முதல்முதலாய் நான் காணப்போவது என் அருமை இயேசு இராஜாவைத்தான். இப்பொழுது என்னுடைய கற்பனை உள்ளமோ, அவருடைய முகத்தின் மேன்மையான அழகை தியானித்து தியானித்து களிகூர்ந்துகொண்டேயிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

ஒருமுறை மூடி பக்தன் தன்னுடைய ஒரு பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் அவர்களைப் பாடும்படி அழைத்தபோது அவர்கள் பாடின பாடல் என்ன தெரியுமா? “இவ்வுலகின் பாடுகள் மறையும்; வாழ்க்கையின் நரம்புகள் அறுந்துபோகும். விழிப்பேன் நான் தேவ சமுகத்தில்; இராஜாவை முகமுகமாய்க் காண்பேன். அவர் அரண்மனையில் உல்லாசமாய் உலாவுவேன்; அவர் கிருபையை அழகாய்ப் பாடி ஆனந்திப்பேன்” என்று அவர்கள் பாடினபோது, ஜனங்கள் எல்லோரும் கண்ணீர் சிந்தினார்கள். தேவ அன்பின் அபிஷேகம் ஒவ்வொருவரையும் நிரப்பினது.

நான் இயேசுவைக் காண்பேன், அவருக்கு ஒப்பான மகிமையிலே                    மறுரூபமாக்கப்படுவேன். அவருடைய சாயலால் திருப்தியாவேன் என்பதுதான் அனைத்து தேவபிள்ளைகளின் நம்பிக்கையாக இருக்கவேண்டும். பூமிக்குரிய வாழ்க்கையை முடித்து மறுகரையான மோட்சத்தில் பிரவேசிக்கும்போது, மகிமையின் சொரூபியான கர்த்தரைப் பார்ப்பது எவ்வளவு ஆனந்த பாக்கியம்! வேதம் சொல்லுகிறது, “உன் கண்கள் இராஜாவை மகிமைப் பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்” (ஏசா. 33:17). அப். பவுல் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தார்.

அவர் சொல்லுகிறார், “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம், இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்” (1 கொரி. 13:12). தேவபிள்ளைகளே, உங்களுடைய உள்ளத்தில் கர்த்தரைத் தரிசிப்பது என்னும் உன்னத அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதில் உங்களுக்கு ஆர்வவும், நம்பிக்கையும் இருக்கிறதா? தேவனை சந்திக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறீர்களா?

நினைவிற்கு:- “அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.