No products in the cart.
மே 06 – பாதாளத்தை ஜெயித்தார்கள்!
“என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” (சங். 16:10).
ஆதாமின் பாவத்தினிமித்தம், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள், பாதாளத்தில் சாத்தானால் சிறைவைக்கப்பட்டார்கள். யாக்கோபு துக்கத்தோடு, “நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார்” (ஆதி. 42:38). “பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது” (சங். 18:5) என்றார் தாவீது. “பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்” (யோபு 17:13) என்றார் யோபு பக்தன்.
ஆனால் இயேசுகிறிஸ்து கல்வாரி மரணத்தினாலே, சாத்தானை மட்டுமல்லாமல், மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தார். பாதாளத்தின் திறவுகோலை சாத்தானுடைய கையிலிருந்து பிடுங்கி, பாதாளத்துக்குள் சென்று, சாத்தானால் சிறைவைக்கப்பட்ட அத்தனைப் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் சிறைமீட்டார்.
வேதம் சொல்லுகிறது, “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, கீழ்ப்படியாமற்போனவைகள்” (1 பேது. 3:18-20).
பாதாளத்தில் சென்றும்கூட, இயேசுவால் பிரசங்கிக்க முடிந்தது. பாதாளத்தின் வல்லமையினால் அவரை மேற்கொள்ள முடியவில்லை. பாதாளத்திலுள்ள பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை மீட்கும் பொருளாக, தம்முடைய இரத்தத்தையே இயேசு செலுத்தினார். முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவர்த்தி செய்யும்பொருட்டு, அவர் மரணமடைந்தார் என்று எபி. 9:15-லே வாசிக்கிறோம்.
பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களின் பாவங்கள் மூடப்பட்டிருந்ததேதவிர, முற்றிலும் கழுவிச் சுத்திகரிக்கப்படவில்லை (சங். 32:1). அவர்கள் பூரணமாய் சுத்திகரிக்கப்படுவதற்கு, இயேசு கிறிஸ்துவினுடைய கல்வாரி மரணம்வரையிலும் பொறுத்திருக்கவேண்டியதாயிற்று.
பாதாளத்தில், ஆபிரகாமின் மடியிலே, லாசரு இளைப்பாறினார். எனினும் சிலுவை மரணத்திற்குப் பிறகு, அத்தனைபேரையும், இயேசு சிறைமீட்டு உன்னதத்திற்கு ஏறினார் (எபே. 4:8). அப்பொழுது பரதீசி என்கிற தோட்டத்தை ஏற்படுத்தினார். அன்றைக்கு அவரோடுகூட மரித்த கள்ளனோடும், பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களோடும், பரதீசியில் இளைப்பாறினார்.
சரி, பாதாளத்தை ஜெயிக்க அவருக்கு உதவியாயிருந்தது எது? ஆம், அதுதான் உயிர்த்தெழுதலின் வல்லமை. அந்த வல்லமையை அப். பவுல் ஆவலோடு தேடினார். அவர் சொல்லுகிறார், ‘அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், …. அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி’ என்று அவர் எழுதுகிறார். அதற்காகவே அவர் எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டு, குப்பையுமாக எண்ணினார் (பிலி. 3:10,11).
தேவபிள்ளைளே, இன்றைக்கும் பாதாளத்தின் வல்லமையை ஜெயிக்கிற அதிகாரத்தை கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிறார். பாதாளத்தின் வாசல்கள் ஒருபோதும் உங்களை மேற்கொள்ளுவதில்லை என்று வாக்களித்திருக்கிறார். கர்த்தருடைய சுவிசேஷத்தின் வல்லமையினால், பாதாளத்துக்குச் செல்லுகிறவர்களை மீட்டெடுத்து, பரலோகப் பாதைக்குக் கொண்டுவாருங்கள்.
நினைவிற்கு:- “மரித்தேன், ஆனாலும் இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி. 1:18).
