No products in the cart.
ஏப்ரல் 30 – பிரதிஷ்டையின் பார்வை!
“உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்” (ஆதி. 13:14).
ஆபிரகாமை ஆசீர்வதிக்கும்படி கர்த்தர் இரண்டு காரியங்களை முக்கியமாகச் சொன்னார். முதலாவது, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார் என்றும், இரண்டாவதாக நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி என்றும் சொன்னார்.
கர்த்தர் செய்யவேண்டிய காரியம் என்ன? கண்பார்க்கும் பூமியையும், கால்மிதிக்கும் தேசத்தையும் ஆபிரகாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் கொடுப்பதாகும். கர்த்தர், “ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்” (யோபு 9:10). அப்படி கர்த்தர் உங்களுக்கு செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியதென்ன என்று கர்த்தரிடம் கேளுங்கள்.
உதாரணமாக, சிவந்த சமுத்திரத்திற்கு நேராக கோலை நீட்டவேண்டியது மோசேயின் கடமை. சிவந்த சமுத்திரத்தை இரண்டாய்ப் பிரிப்பது கர்த்தருக்குரியது. சூம்பின கையுடைய மனிதன், தன் கையை விசுவாசத்தோடு நீட்டவேண்டியது அவனுடைய கடமை. அவனுடைய கையை மறுகையைப்போல மாற்றவேண்டியது கர்த்தருக்குரியது. நாகமான் யோர்தான் நதியில் ஏழுமுறை முழுகவேண்டியது அவனுடைய கடமை. குஷ்டரோகத்தை நீக்கி, புதிய மாம்சத்தைக் கொடுக்கவேண்டியது கர்த்தருக்குரியது. தசமபாகங்களைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டியது நம்முடைய கடமை. வானத்தின் பலகணிகளைத் திறந்து, ஆசீர்வதிக்கவேண்டியது கர்த்தருக்குரியது.
இன்றைக்கும்கூட கர்த்தர் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள்? அவரை விசுவாசத்தோடு நோக்கிப்பாருங்கள். சிலர் காலையில் எழுந்ததும் செய்தித்தாளைத்தான் நோக்கிப்பார்க்கிறார்கள். வேதவசனங்களை நோக்கிப்பார்ப்பதில்லை.
உங்களைச்சுற்றி எங்கும் கர்த்தருடைய நாமம் மகிமைப்படும்படி உங்களுடைய கண்களை ஏறெடுங்கள். மாம்சகண்கள் நூறடிவரைக்கும் பார்க்கக்கூடும். ஆனால், ஆவிக்குரிய, தரிசனக்கண்களோ, உலகம் முழுவதும் நோக்கிப்பார்க்கக்கூடும். ஆகவே, உங்களுடைய தரிசனத்தின் எல்லையை விரிவுப்படுத்தி, கர்த்தர் உங்களுக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நோக்கிப்பாருங்கள்.
அடுத்தபடியாக தரிசனக்கண்களால் நீங்கள் கற்பனை செய்துபார்க்கிற இடங்களை நோக்கி, விசுவாசப் பயணத்தை ஆரம்பித்துவிடுங்கள். “கால்மிதிக்கும் தேசத்தையெல்லாம் உங்களுக்குச் சொந்தமாகத் தருவேன்” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். உலகத்திலே எந்த அரசாங்கமும் இவ்வளவு பெரிய பிரமாண்டமான தீர்மானத்தை அறிவிக்கமுடியாது. ஆகவே உங்களுடைய தரிசனத்தின் எல்லைகளை விரிவாக்குங்கள். விசுவாச நடைபோடுங்கள்.
கர்த்தர் ஆபிரகாமோடு இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனே, ஆபிரகாம் செய்த காரியம் என்ன? அப்படியே கீழ்ப்படிந்து தன் கூடாரத்தை பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார் (ஆதி. 13:18). அங்கே கர்த்தரைத் தொழுதுகொண்டார். தேவபிள்ளைகளே, ஆபிரகாமின் வாக்குத்தத்தங்கள் உங்களுக்குரியது. நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாகவும், சந்ததியாகவும் இருக்கிறீர்கள்.
நினைவிற்கு:- “ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்” (ஆதி. 24:1).
