Appam, Appam - Tamil

Sep 25 – அந்த கழுதை!

“உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். அது பிலேயாமைப் பார்த்து, நீர் என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன். …நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள் வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா?…என்றது” (எண். 22:28,30).

கழுதையைக் குறித்து ஏராளமான குறிப்புகள் வேதத்திலே காணப்படுகின்றன. ஆபிரகாம் தன் மகனாகிய ஈசாக்கை பலி செலுத்த மோரியா மலைக்கு கொண்டுபோகும்போது கழுதையின்மேல் சேணம் வைத்துச் சென்றார் (ஆதி. 22:3). யாக்கோபின் குமாரர் தானியம் வாங்க எகிப்துக்குச் செல்லும்போது கழுதையின்மீது அமர்ந்துசென்றார்கள். தானியத்தை கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்று நாம் அறிகிறோம் (ஆதி. 42:26).

ஆனால், கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்து பேசும்படியாக செய்ததுதான் பெரிய அற்புதம். கழுதையைப் பேசவைத்து பெரிய தீர்க்கதரிசியை உணர்த்தினார். எப்படி சேவலைக் கூவவைத்து பேதுருவை உணர்த்தினாரோ, அதுபோலவே பிலேயாம் தீர்க்கதரிசி உணர்த்தப்பட்டார். பாருங்கள்! கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தோடு வழியிலே நிற்பதைக்கண்ட கழுதை விலகியது. ஆனால், பிலேயாமோ அதை அறியாமல் கழுதையை அடித்துக்கொண்டே இருந்தார். அந்தக் கழுதை தன் எஜமான்மேல் மிகுந்த விசுவாசமாய்த் தொடர்ந்து முன்னேற முயன்றும் அதனால் முடியாமற்போனது.

உங்களைச்சூழ பல மிருகங்களும், பறவைகளும் இருக்கின்றன. அவைகள் பல வேளைகளிலே கர்த்தருடைய அசைவாடுதலை உணருகின்றன. கர்த்தருடைய வழிநடத்துதலை உணருகின்றன. கர்த்தருக்கு நூற்றுக்கு நூறு கீழ்ப்படிகின்றன. ஆனால், மனிதனோ, கண் இருந்தும் குருடனாய், செவிகள் இருந்தும் செவிடனாய், மனம் போன போக்கிலே சென்றுசொண்டிருக்கிறான்.

கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார். அப்பொழுதுதான் கர்த்தருடைய தூதன் தனக்கு முன்பாக உருவின பட்டயத்தோடு நிற்கிறதைக்கண்டு, தலைகுனிந்து, முகம்குப்புற விழுந்து பணிந்தான். உங்களுடைய ஆவிக்குரிய கண்கள் எப்பொழுதும் திறந்திருக்கவேண்டியது அவசியம். உங்களுடைய செவிகள் கர்த்தருடைய சித்தத்துக்கு திறந்திருக்கவேண்டியது அவசியம். உங்களுடைய இருதயம் கர்த்தருடைய சித்தத்துக்குப் பூரணமாய் ஒப்புக்கொடுக்கப்படவேண்டியது அவசியம்.

புதிய ஏற்பாட்டிலே, நல்ல சமாரியனுடைய கழுதை எவ்வளவு பொறுமையுள்ளதாய் இருந்தது என்பதைக் கவனியுங்கள். காயப்பட்ட மனிதனை அந்தக் கழுதை கஷ்டப்பட்டு சுமந்து சென்றது. அந்த கழுதை இல்லாவிட்டால் அந்த நல்ல சமாரியன் செய்த உதவி பூரணமாய் இருந்திருக்க முடியுமா? அவன் சத்திரக்காரனுடைய இருப்பிடத்திற்குச் சென்று சேர்ந்திருக்க முடியுமா? எஜமானுடைய பாரத்தை தன் பாரமாக எவ்வளவாய் அது சுமந்தது!

தேவபிள்ளைகளே, பிள்ளைகளின் பாரத்தை பெற்றோர் சுமக்கிறார்கள். ஊழியர்களின் பாரத்தை விசுவாசிகள் சுமக்கிறார்கள். கர்த்தரோ, நம் எல்லாருடைய பாரத்தையும் தன்மேல் சுமந்தார். அவர் நம் எல்லோருக்கும் சுமைதாங்கியாய் மாறினார் அல்லவோ? அந்த அன்பை எப்படி மறக்கமுடியும்?

நினைவிற்கு:- “இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும், இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்” (சகரியா 9:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.