AppamAppam - Tamil

Sep – 28 – ஒரு முழம் அதிகம்!

“கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத். 6:27).

கிறிஸ்தவர்கள் சந்தோஷமாயிருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். ராஜாவின் கெம்பீரம் அவர்களுக்குள் இருப்பதுடன் பரலோக சந்தோஷம் அவர்களது உள்ளத்தில் குடிகொண்டிருக்கவேண்டும். ஆனால் இன்றைய கிறிஸ்தவர்களின் நிலைமை என்ன? அவர்கள் புறஜாதி மக்களைப் பார்க்கிலும் அதிகமாய்க் கவலைப்பட்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 
ஒரு சிறு பெண்ணும், அவளுடைய தகப்பனாரும் மிருகக் காட்சி சாலைக்கு போயிருந்தார்கள். பல மிருகங்களைப் பார்த்துவிட்டு வந்த அந்த சிறு பெண் கடைசியில் நீளமான முகத்தையுடைய குதிரையைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆச்சரியம் தாங்க முடியாமல் ‘அப்பா, இந்த குதிரையைப் பாருங்கள். எவ்வளவு நீளமான முகம்! கண்டிப்பா இது கிறிஸ்தவ குதிரையாகத்தான் இருக்க வேண்டும்’ என்று சொன்னாள்.
தேவபிள்ளைகளே, சற்று சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் உண்மை கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பலரை அந்த சிறுமி கவனித்திருக்கக் கூடும். அவர்கள் பல கவலைகளினால் பீடிக்கப்பட்டு முகத்தை ‘உம்’ என்று வைத்துக் கொண்டிருப்பதை பார்த்திருந்திருப்பாள். கிறிஸ்தவர்கள் என்றாலே, கவலை தோய்ந்த முகத்தைக் கொண்டவர்கள் என்றுதான் அவள் எண்ணியிருந்திருப்பாள்.
கிறிஸ்தவன் என்றால் மகிழ்ச்சியுடையவன் என்பதை உலகம் அறியட்டும்! "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பது பழமொழி. இயேசு உங்கள் உள்ளத்தை அழகுபடுத்தியிருப்பாரென்றால், உங்களுடைய முகமும் அழகாயிருக்கும்! நீங்கள் சந்தோஷமாய் இருப்பீர்கள். நீதியின் சூரியனாகிய கிறிஸ்து உங்களுக்குள்ளே வாசம் செய்வாரென்றால், சூரியனின் பிரகாசம் உங்கள் முகத்தில் தெரியும்.
இன்னும் சில கிறிஸ்தவர்கள் முகத்தை நீளமாய் வைத்துக் கொண்டிருப்பார்கள். அது கவலையினால் ஏற்படுவதல்ல. ஆவிக்குரிய பெருமையினால் ஏற்படுவது. மற்ற கிறிஸ்தவர்களை அற்பமாய் எண்ணி தங்களை பரிசுத்தவான்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் நீண்ட முகம். ‘நாங்கள் தான் பரலோகம் போவோம்; நாங்கள் தான் பரம எருசலேமுக்கு பங்குள்ளவர்கள்’ என்று சொல்லி மற்ற கிறிஸ்தவர்களை விட்டுத் தங்களை வேறுபிரித்து பெருமையாக நடக்கிறவர்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய முகத்தை மிகவும் சீரியசாக வைத்துக் கொள்கிறார்கள். ‘வேறுபாட்டின் உபதேசம்’ என்ற பெயரில் சகோதர அன்பில்லாமல் நடந்து கொள்ளுகிறார்கள். வேதத்திலே, பரிசேயர், சதுசேயர், வேதபாரகர் அப்படித்தான் இருந்தார்கள். 
"பில்லி" என்ற பரிசுத்தவான் எப்போதுமே சிரித்த முகத்தோடு பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், கர்த்தரை துதித்துக் கொண்டும் அளவில்லாத மகிழ்ச்சியுடன் காணப்படுவாராம். அவருடைய மகிழ்ச்சியால் அநேகர் கர்த்தரண்டை இழுக்கப்பட்டார்கள். தேன் இருக்கிற இடத்தை நோக்கித்தான் தேனீக்களும், வண்டினங்களும், எறும்புகளும் ஓடி வரும். வேப்பெண்ணெயை நோக்கி ஏதாகிலும் ஓடி வருகிறதா? இல்லையே! தேவபிள்ளைகளே, வேப்பெண்ணெய் கிறிஸ்தவர்களாய் நீளமுகத்தோடு இராதேயுங்கள். தேனிலும் இனிய சுபாவத்தோடு கிறிஸ்துவை மகிழ்வுடன் பிரதிபலிப்பீர்களாக.

நினைவிற்கு :- "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்" (பிலி. 4:4).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.