AppamAppam - Tamil

Sep – 27 – தேசமே, பயப்படாதே!

“தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்” (யோவேல் 2:21). நீங்கள் வாழுகிற இந்த நாட்கள் எழுப்புதலின் நாட்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்கிற நாட்கள். சரித்திரத்திலே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு பின்மாரி ஊற்றப்படுகிற நாட்கள். கர்த்தர் உங்கள் தேசத்திலும், வீட்டிலும் பெரிய காரியங்களைச் செய்வார். எழுப்புதலில் ஆசாரியர்கள் தாய்மார்கள் மற்றும் வாலிபர் ஆகியோருக்கு தனித்தனியே கடமைகள் உண்டு. 1. ஆசாரியர்கள்:- வேதம் சொல்லுகிறது, “ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து, இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள்” (யோவேல் 1:13).கர்த்தருடைய ஊழியக்காரர்கள் எழும்பட்டும். கர்த்தர் மேல் உண்மையான அன்புள்ளவர்கள் ஒன்று சேரட்டும். பெரிய எழுப்புதலுக்காக கையோடு கை கோர்த்து, தோளோடு தோள் நின்று ஒருமனமாகட்டும். வேதம் சொல்லுகிறது, “பரிசுத்த உபவாச நாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தில் கூடி வரச்செய்து கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்” (யோவேல் 1:14). “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளா. 7:14). இந்த நாட்கள் கர்த்தர் ஏராளமான ஊழியர்களை எழுப்புகிற நாட்கள். ஆவியின் வரங்களையும் வல்லமைகளையும் பொழிந்தருளுகிற நாட்கள். தேவனுடைய ஊழியக்காரர்கள் ஒன்றுபட்டு மன்றாட வேண்டிய நேரம் இது. 2. தாய்மார்கள்:- தெபொராள் இஸ்ரவேலருக்கு ஒரு தாயாக எழும்பினாள். வேதம் சொல்லுகிறது, “தெபோராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப் போயின; இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின” (நியா. 5:7). இன்று இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் உண்டு. அவர்களுக்காக பரிதபித்து ஜெபிக்கும் ஜெப தாய்மார்களின் கையில் அல்லவோ அவர்களது இரட்சிப்பு இருக்கிறது. எஸ்தர்களே, கர்த்தருக்காக எழும்புவீர்களாக. வேதம் சொல்லுகிறது, “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்” (எஸ்தர் 4:14). 3. வாலிபர்கள்:- உங்கள் வாலிபம் யாருக்காக செலவிடப்படப்போகிறது? உலகத்திற்காகவா அல்லது கிறிஸ்துவுக்காகவா? உங்கள் வாலிப பிராயத்தை சிற்றின்பங்களுக்காக செலவளிப்பீர்களா அல்லது கர்த்தருடைய ஊழியத்திற்கென்று செலவளிப்பீர்களா? வாலிபம் மாயை என்பதை அறிந்துகொள்ளுங்கள். வாலிபத்தின் பெலனும் மாயை என்பதை அறிந்துகொள்ளுங்கள் (பிர. 12:1). தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக எழும்புவீர்களென்றால், அவர் உங்களைப் பயன்படுத்தி, உங்களுக்கு வரங்களையும் வல்லமைகளையும் தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். நினைவிற்கு :- “நான் உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.