AppamAppam - Tamil

Sep – 26- வேளை வந்தபோது!

“வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள்” (லூக். 22:14). கர்த்தர் குறிப்பிட்ட காலம் என்பதிலும், குறிப்பிட்ட வேளை என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். பிதாவின் சத்தத்திற்கு ஒப்புக்கொடுத்த அவர் பிதாவின் வேளைக்கும் காத்திருந்தார் என்பதை நீங்கள் மறந்து போகக்ககூடாது. அவருடைய கண்களானது பிதாவின் வேளைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. தம் சீஷர்களோடு கூட பந்தியிருப்பதற்கும் ஏற்ற வேளையை அவர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார். அந்த வேளை வந்த போது சீஷர்களோடுகூட பந்தியிருந்தார் என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, வேளையையும் காலத்தையும் அறிய உங்களை ஒப்புக்கொடுப்பீர்களாக. கர்த்தர் ஏற்ற வேளையில் உங்களை உயர்த்துவார். ஏற்ற வேளையில் உங்களுக்கு சகாயம் செய்வார். அவர் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்திலே நேர்த்தியாக செய்து முடிப்பார். கர்த்தர் எற்ற வேளையில் ஆகாரம் தருவார் (சங். 104:27) என்றும், கர்த்தர் ஏற்ற வேளையில் நீதி செய்வார் (சங். 119:126) என்றும் சங்கீதக்காரன் சொல்லுகிறார். ஏற்ற வேளையில் என்ன பேசவேண்டுமென்பதை உனக்குப் போதிப்பார் என்று லூக். 12:12 -ல் வாசிக்கிறோம். கர்த்தர் ஏற்ற வேளையிலே உங்களுக்குச் சகாயம் செய்யும்படி நீங்கள் தேவனுடைய பாதத்திற்கருகே காத்திருப்பீர்களா? சகாயம் செய்யும் வேளைக்காக எதிர்பார்த்திருப்பீர்களா? ஒருமுறை தேவ ஊழியரான பில்லிகிரகாம் எலிசபெத் ராணியுடன் விருந்து உண்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். அந்த விருந்தில் அவர் பங்குபெறுவதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கும் சுமார் 45 நிமிடங்களுக்கு முன்பாகவே அவர் அந்த இடத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டியதாயிற்று. தேவபிள்ளைகளே, நீங்கள் ராஜாதி ராஜாவாகிய கர்த்தரை சந்திப்பதற்கு ஏற்ற வேளையில் செல்லுகிறீர்களா? நீங்கள் அவருடன் பேசுவதற்கு என்று ஜெப வேளைகளை குறிப்பிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறீர்களா? அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் செல்லும் பழக்கம் கொண்ட பலர், ஆலயத்திற்கு வரும்போது பிந்தி வந்து அலட்சியத்தினை வெளிப்படுத்துகிறார்கள். பிந்தி வந்துவிட்டு முந்தி வெளியேறுவதில் கவனமாயிருக்கிறார்கள். தானியேலுக்கு விரோதமாக பாபிலோனுடைய தேசாதிபதிகளும், பிரபுக்களும், பிரதானிகளும் ஆலோசனைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையிலும் தானியேல் தேவனை நோக்கி மூன்று வேளையும் ஜெபித்தார். தேவனை சந்திக்கும் வேளையை எந்த சூழ்நிலையிலும் தானியேல் தவற விட்டுவிடவில்லை. அதைப்போலவே, தேவனோடுகூட மன்றாடுகிற வேளைக்காகவும், இராஜாவை சந்திக்கும் வேளைக்காகவும் எஸ்தர் காத்திருந்தாள். மூன்று நாட்கள் இரவும் பகலும் உபவாசித்து ஜெபித்தாள். முடிவாக அவளது வேளை வந்தபோது அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டாள். அதன் விளைவாக வேதத்தில் அவளுக்கு நீங்காத ஒரு இடம் கிடைத்தது. நினைவிற்கு :- “ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேலையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்” (எரேமியா 8:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.