AppamAppam - Tamil

Sep – 25 – சிலரை, சிலரை!

“அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்” (எபே. 4:13). “சிலரை, சிலரை, சிலரை” என்று மேலுள்ள வசனம் குறிப்பிட்டுச் சொல்லுகிறது. அந்த சிலரில் ஒருவனாக நீங்கள் காணப்படுகிறீர்களா? நீங்கள் கர்த்தருக்கென்று ஏதாவது ஒரு ஊழியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உற்சாகமாய் அதைச் செய்யுங்கள். தேசம் உங்களுக்கு முன்பாக திறந்திருக்கிறது. சுவிசேஷத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. கிருபையின் வாசல்கள் திறந்திருக்கின்றன. கர்த்தருக்காக ஊழியம் செய்யக்கூடிய எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. நீங்கள் ஆஸ்பத்திரிகளில் ஊழியம் செய்யலாம். தெரு பிரசங்கங்கள் பண்ணலாம். ஜெயிலுக்கு சென்று கைதிகளைச் சந்திக்கலாம். சுவிசேஷ துண்டு பிரதிகளை உபயோகிக்கலாம். ஒன்றும் முடியாவிட்டால் ஜெப ஊழியமாவது செய்யலாம். கிறிஸ்து ஜனங்களுடைய உள்ளத்தில் பிறக்கும்படி பாரத்தோடு ஜெபிப்பீர்களா? கர்த்தர் பட்சபாதமுள்ளவரல்ல. ஒரு சிலருக்கு மட்டும் வரங்களையும், வல்லமைகளையும், கிருபைகளையும், தாலந்துகளையும் கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு மறுப்பவரல்ல. தேவ சமுகத்தில் அமர்ந்து ‘நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்’ என்று கண்ணீரோடு மன்றாடும்போது, நிச்சயமாகவே கர்த்தர் தம்முடைய சித்தத்தை உங்களுக்கு வெளிப்படுத்தித் தருவார். உங்களுக்கு வரங்களையும் வல்லமையையும் அருளுவார்! ‘கேளுங்கள்; அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்’ என்று வேதம் சொல்லுகிறது. தேவபிள்ளைகளே, நீங்கள் ஆத்துமாக்களுக்காக மன்றாடும்போது இந்தியாவை சந்திக்க வேண்டுமே என்ற பாரத்தோடு ஜெபித்து காத்திருக்கும்போது, கர்த்தர் நிச்சயமாகவே உங்களை எழும்பிப் பிரகாசிக்கச் செய்வார். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியாகிய ஏசாயா வரலாற்றின் மையத்திலே நின்று உங்களைப் பார்த்து, “எழும்பு, எழும்பு சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்” (ஏசா. 52:1) என்று குரல் கொடுக்கிறார். நீங்கள், உயரத்திலே எழும்புவீர்களாக. கர்த்தருக்கென்று எழும்புவீர்களாக. அதைரியங்களையும், தோல்விகளையும் உதறிவிட்டு கர்த்தருக்கென்று வல்லமையாக எழும்புவீர்களாக. பொன்னம்மா சன்னியாசினி அவர்கள், எண்பது வயதைத் தாண்டி விட்டபோதிலும், தனது பெலவீனத்தைப் பொருட்படுத்தாமல் ஆலயத்தில் நின்றே பிரசங்கித்துக் கொண்டிருப்பார்கள். அதை பார்க்கும்போது, ‘ஆண்டவரே, இந்த தேசத்தில் வாலிபரும் மூப்பர்களும் திடகாத்திரமுள்ளவர்களும் உமக்காக இன்று எழும்பாததினால் தானே இந்த பெலவீனமான சகோதரி இன்னும் ஓய்வு பெறாமல் உமக்காக நின்றே ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள். வயது முதிர்ந்த போதிலும் இளைப்பார நேரமின்றி அலைந்து கொண்டு இருக்கிறார்களே’ என்று எண்ணத் தோன்றும். தேவபிள்ளைகளே, உலகத்தின் முடிவு சமீபித்து விட்டது. கர்த்தருடைய வருகையோ நெருங்கி விட்டது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கர்த்தருக்காக ஊழியத்தில் எழும்புவீர்களா? உங்களைப் பிரகாசிக்கச் செய்கிறவர் உங்கள் அருகிலிருக்கிறார். நினைவிற்கு :- “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா. 60:1).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.