AppamAppam - Tamil

sep – 24 – மூன்று வெளிப்பாடுகள்!

“நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி” (அப். 7:2). கர்த்தர் ஆபிரகாமுக்கு முதன்முதல் தரிசனமானபோது, மகிமையின் தேவனாக தரிசனமானார். ஆபிரகாமைக் குறித்து சரித்திர ஆசிரியர்கள் எழுதும் போது, ‘ஆபிரகாமுடைய முற்பிதாக்கள் சந்திர தேவதையை வணங்கி வந்தார்கள். ஆபிரகாமின் தகப்பனாகிய தேராகு விக்கிரகங்களை செய்து விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார். எல்லா இடங்களிலும் அந்தகார இருளின் ஆதிக்கம்தான் நிரம்பியிருந்தது. அங்கே சுவிசேஷகர்கள் இல்லை, ஊழியர்கள் இல்லை. புறஜாதி மார்க்கமே நிரம்பி இருந்தது’ என்று எழுதுகிறார்கள். ஆயினும் ஆபிரகாமின் உள்ளத்தில் ஜீவனுள்ள தேவனை நாடும் விருப்பம் இருக்கிறதைக் கண்டு கர்த்தர் ‘மகிமையின் தேவனாக’ ஆபிரகாமுக்கு தரிசனமானார். அதனாலே மகிமையின் தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிவது கடினமான காரியமாய் இல்லை. அவர் தன் தேசத்தையும் இனத்தையும் விட்டு விட்டு மகிமையின் தேவன் அவருக்குக் காண்பித்த தேசத்திற்கு புறப்பட்டுப் போனார். தேவபிள்ளைகளே, உங்களை அழைத்த ஆண்டவர் மகிமையின் ராஜா என்பதை உங்கள் கண்கள் காணுமானால், கர்த்தருக்காக எல்லா பாவ சந்தோஷங்களையும் விட்டுவிடுவது கடினமாய் இருக்காது. இரண்டாவதாக, கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானபோது, ‘உன்னதமான தேவனாக’ தரிசனமானார். “அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம்” (ஆதி. 14:18-20) என்று சொன்னான். கர்த்தர் உன்னதமான தேவனாக ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தியபோது ஆபிரகாமில் ஏற்பட்ட மாறுதல் என்ன? கர்த்தருக்கு தசமபாகம் கொடுத்தார் (ஆதி. 14:20). வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுடைய ஆசீர்வாதமும், உன்னதமானவரின் உயர் மறைவும் அடைக்கலமும் தனக்குத் தேவை என்பதை உணர்ந்து ஆபிரகாம் தன் விளைபொருட்கள் எல்லாவற்றிலும் தசமபாகத்தைக் கர்த்தருக்கென்று கொடுத்து கர்த்தரை சந்தோஷமாய் கனம்பண்ணினான். மூன்றாவதாக, கர்த்தர் ஆபிரகாமுக்கு “சர்வ வல்லமையுள்ள தேவனாக” வெளிப்பட்டார். கர்த்தர், “நான் சர்வ வல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் (ஆதி. 17:1, 2) என்றார். சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வெளிப்பட்டதினாலே தள்ளாடுகிற நூறாவது வயதிலேயே ஆபிரகாம் விசுவாசிகளுக்குத் தகப்பனானார். தேவபிள்ளைகளே, உங்கள் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன். அவரால் கூடாத காரியம் ஒன்றுண்டோ? நினைவிற்கு :- “ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்” (எபி. 11:12).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.