No products in the cart.
ஜூலை 2 – ஆபிரகாமின் உண்மை!
“என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை” (ஆதி. 24:27).
கர்த்தர் உண்மையுள்ளவர். தம்முடைய பிள்ளைகளும் உண்மையாயிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர். கர்த்தர் ஆபிரகாமிடம் ஒரு உண்மையை கண்டார். அது கர்த்தருக்கு கீழ்ப்படிகிற உண்மை. “உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ” (ஆதி. 12:1) என்று கர்த்தர் சொன்னபோது, ஆபிரகாம் அப்படியே செய்தார்.
அப்படி புறப்பட்டுச் செல்லுவது அந்த நாட்களில் எத்தனை ஆபத்தானது! அதற்கு அதிக அதிகமான மனஉறுதி இருக்கவேண்டும். இருப்பினும், ஆபிரகாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிவதில் உண்மையுள்ளவராயிருந்தார்.
ஆபிரகாமுடைய வாழ்க்கையைப்பற்றி வாசித்துப் பாருங்கள். அவரது உண்மைத்தன்மை நம் இருதயத்தை ஆச்சரியப்பட வைக்கிறது. தன்னுடைய ஒரே மகன் என்றும் பாராமல், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, மோரியா மலையின் பலிபீடத்தில் பலியாக ஈசாக்கை வைத்தபோது, அந்த உண்மையின் உச்சிதம் வெளிப்பட்டது. கர்த்தரால் ஆபிரகாமின் உண்மையை பாராட்டாமல் இருக்கவே முடியாத நிலை.
ஆபிரகாமுடைய வேலைக்காரனாகிய எலியேசர் சொல்லுகிற வார்த்தைகளை கவனித்துப் பாருங்கள். “கர்த்தர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்” (ஆதி. 24:27).
ஆபிரகாமின் உண்மையின்பேரில், கர்த்தர் தலைமுறை தலைமுறையாக ஆபிரகாமின் சந்ததியைத் தெரிந்துகொண்டு ஆசீர்வதித்தார். தன்னை ஆபிரகாமின் குமாரன் என்று அழைத்து, கர்த்தர் ஆபிரகாமை உயர்த்தினார் (மத். 1:1). உண்மையுள்ளவர்களுக்கு அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்!
தேவபிள்ளைகளே, நீங்கள் ஆபிரகாமை உங்களுடைய முற்பிதாவாகக் கொண்டிருக்கிறீர்கள். ஆபிரகாமை விசுவாசிகளின் தகப்பன் என்று அழைக்கிறீர்கள். ஆபிரகாமின் சந்ததிக்குரிய சுதந்திரங்களையெல்லாம் நீங்கள் சுதந்தரித்துக் கொள்ளுகிறீர்கள். அப்படியிருக்க ஆபிரகாமிடமிருந்த உண்மை உங்களிடமும் இருக்க வேண்டுமல்லவா?
கர்த்தர் ஒரு நாளும் இரு மனதையோ, இரு வழிகளையோ, மாய்மாலங்களையோ விரும்புவதில்லை. “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்” (சங். 51:6) என்பதே சங்கீதக்காரனின் ஜெபமாக இருந்தது. அதுவே உங்களுடைய ஜெபமாகவும் இருக்கட்டும்!
நினைவிற்கு:- “ஆபிரகாமுடைய இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்” (நெகே. 9:8).