No products in the cart.
Sep – 15 – கட்டுக்கதைகள்
“…சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திகேதுவாக முயற்சிபண்ணு” (1தீமோ. 4:7).
கதைகளைப் பிரசுரிக்க நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் இருக்கின்றன. சினிமாக்களும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளும் பல கட்டுக்கதைகளை ஜனங்கள் மத்தியிலே கொண்டுவருகின்றன. கிறிஸ்தவ உலகத்திலேயும் கட்டுக்கதைகள் கட்டுக்கடங்காத முறையில் உட்பிரவேசித்து விடுகின்றன. சிறுகதைகளும், உவமானங்களும், அவசியம்தான். அரிய பெரிய சத்தியங்களை எளிதான முறையில் ஜனங்களுக்கு விளக்கிச் சொல்ல கதைகள் அவசியமே. கிறிஸ்துவும்கூட சிறு சிறு உவமைகள் மூலமாக பெரிய பெரிய சத்தியங்களை மக்கள் உள்ளத்திலே பதியச் செய்தாரே! பிரசங்கங்களில்கூட ஒரு சில கதைகள் அவசியம்தான். ஆனால் முழு பிரசங்கமும் கதையாகவே போய்விடக்கூடாது.
ஒரு பிரசங்கியார் கர்த்தருடைய அன்பையும், பரிசுத்தத்தையும் குறித்து ஊக்கமாய் பேசினார். இடையிலே ஒரு உதாரணத்துக்காக குரங்கு வாழைப்பழம் தின்ற கதையை அழகாய் வர்ணித்து விவரித்தார். கூட்டம் முடிந்தபோது பலரிடம் தன்னுடைய பிரசங்கத்தை குறித்த கருத்தை அவர் கேட்டபோது எல்லாரும் சொன்ன ஒரே காரியம் குரங்கு கதை சுவாரஸ்யமாக இருந்தது என்பதே. அந்த ஊழியரின் முகம் அப்படியே சுருங்கிப்போனது.
அவர்கள் கர்த்தருடைய அன்பைக் குறித்து பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அந்த கட்டுக்கதையோ சத்தியத்தை மூடி மறைத்துப் போட்டது. அப். பவுல், இந்த கட்டுக்கதைகளைக் குறித்து தீத்துவுக்கும், தீமோத்தேயுவுக்கும் எழுதிய நிருபத்திலே, “வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்கு கட்டளையிடு” (1தீமோ. 1:3) என்று குறிப்பிடுகிறார்.
வேதம் சொல்லுகிறது, “சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிப்பண்ணு” (1தீமோ. 4:7). “சத்தியத்துக்குச் செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்” (2 தீமோ. 4:4). “நாங்கள் தந்திரமான கட்டுகதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்” (2 பேதுரு 1:16).
கட்டுக்கதைகளை மாத்திரமல்ல, சின்ன சம்பவங்களை பெரிதாக மிகைப்படுத்தி சுவாரஸ்யமாகப் பேசி ஜனங்களுடைய கவனத்தை தங்கள் பக்கமாய் இழுக்கலாம் என்று அநேகர் எண்ணுகிறார்கள். அதிலே தேவன் பிரியப்படுவதில்லை. சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது என்கிறார் ஞானி (நீதி. 10:19).
கர்த்தரோடு அதிகமாய் நெருங்கி ஜீவித்து அவரோடு பேசிக் கொண்டிருக்கிறவர்கள் ஜனங்களிடம் வீண் வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஜனங்கள் மத்தியிலே வீண் கதைகளை பேசுகிறவர்கள் முழங்கால்படியிட்டு ஜெபிக்கமாட்டார்கள். தேவபிள்ளைகளே, உங்கள் வாயின் வார்த்தைகளைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்.
நினைவிற்கு :- “பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்” (நீதி. 16:32).