AppamAppam - Tamil

ஜூன் 19 – அவிழ்த்துவிட்டீர்!

“கர்த்தாவே, நான் உமது அடியேன்; என் கட்டுகளை அவிழ்த்து விட்டீர்” (சங். 116:16).

கர்த்தர் உங்களுடைய கட்டுகளிலிருந்து உங்களுக்கு விடுதலை தருகிறார். “சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும் கட்டுண்டவர்களுக்கு கட்டவிழ்த்தலைக் கூறவும் அவர் என்னை அனுப்பினார்” (ஏசாயா 61:1) என்று வேதம் சொல்லுகிறது.

பதினெட்டு வருடமாய் சாத்தானால் கட்டப்பட்டு கூனியாயிருந்த ஸ்திரீயின் கட்டுகளை இயேசு அவிழ்த்தபோது, அவள் நிமிர்ந்து தேவனை மகிமைப்படுத்தினாள். ஆம், அது சாத்தானின் கட்டு. இன்றைக்கும் அநேகரை சாத்தான் பில்லி சூனியங்களினாலும், செய்வினைகளினாலும் கட்டி வைத்திருக்கிறான். ஆனால் குமாரன் விடுதலையாக்கும்போது நீங்கள் மெய்யாகவே விடுதலையடைவீர்கள் (யோவான் 8:36). அவரால் கட்டவிழ்க்க முடியாத கட்டுகள் ஒன்றுமேயில்லை.

சிலருக்கு நோயாகிய கட்டு இருக்கிறது. நோய் அவர்களை பெலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க முடியவில்லை. காரணம் இது ஒரு கட்டு. பெரும்பாடுள்ள ஸ்திரீக்கு பன்னிரெண்டு வருடங்களாக இந்த கட்டு இருந்தது. அவள் தன் ஆஸ்தியை எல்லாம் வைத்தியருக்கு செலவழித்துப் பார்த்தாள். ஒரு நாள் இயேசுவண்டை வந்தபோது, இமைப்பொழுதில் அவளுடைய கட்டுகள் எல்லாம் அறுந்து போயிற்று. தேவனுடைய வல்லமை பாய்ந்து சென்று அவளை குணமாக்கிற்று.

நிக்கொதேமுவுக்கு ஒரு கட்டு இருந்தது. அது பாரம்பரிய கட்டு. அவன் பரிசேயனாயிருந்தபடியினால், விடுதலையோடு இயேசுவைப் பின்பற்ற முடிய வில்லை. இராக்காலத்திலே இரகசியமாய் ஒருவருக்கும் தெரியாமல் இயேசுவினிடத்தில் வந்தான் (யோவான் 3:2). இன்றைக்கும் அநேகர் வேதத்திலுள்ள ஆழமான சத்தியங்கள் என்ன என்று அறிந்திருந்தும், தங்களுடைய சபைக் கட்டுப்பாட்டினால் ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க முடியாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வேறு சிலரை அவிசுவாசம் கட்டி வைத்திருக்கிறது. கர்த்தர் அற்புதத்தை செய்யக்கூடாதபடி அவர்கள் தோல்வியான வார்த்தைகளையும், அவிசுவாசமான வார்த்தைகளையும் பேசுகிறார்கள். இயேசு மரித்துப் போன லாசருவை உயிரோடு எழுப்பப் போனார். ஆனால் லாசருவினுடைய சகோதரிகளுக்கோ விசுவாசமில்லை. இயேசு லாசருவினுடைய கல்லறையண்டை வந்த பின்பும் மார்த்தாள் அவிசுவாசமான வார்த்தைகளையே பேசினாள்.

மரியாள், “நாறுமே, நான்கு நாளாயிற்றே” (யோவா. 11:39) என்றாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தீரானால் எங்கள் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” (யோவா. 11:32) என்றாள். ஆனால் இயேசுவோ, லாசருவே, வெளியே வா என்று அழைத்தபோது, மரித்தவன் வெளியே வந்தான். ஆனாலும் அவனுடைய கால்களும், கைகளும் பிரேத சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி இவனைக் கட்டவிழ்த்து விடுங்கள் என்றார் (யோவா. 11:43,44).

தேவபிள்ளைகளே, கட்டவிழ்த்து விடுங்கள் என்பதுதான் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற கட்டளை.

நினைவிற்கு:- “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்” (யோவான் 8:32).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.