AppamAppam - English

Sep – 14 – கர்த்தருடன்!

“கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது” (2 நாளா. 17:3,5).

இன்றைக்கு அநேகர் ஐசுவரியத்தையும், கனத்தையும் நோக்கி ஓடுகிறார்கள். இவர்கள் எவ்வளவு வேகமாக ஓடி ஓடி விரட்டினாலும் இவர்களுக்கு எட்டாத தூரத்தில் அது ஓடிவிடுகிறது. யோசபாத் ஆசீர்வாதத்தைத் தேடி ஓடவில்லை. ஆனாலும் ஐசுவரியமும் கனமும் அவரைத் தேடிவந்தன. இதனுடைய இரகசியம் என்ன? வேதம் ஒரே வரியில் அதை விளக்குகிறது. ‘கர்த்தர் யோசபாத்தோடு இருந்தார்’ என்பதே அந்த வரி.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால் கர்த்தர் உங்களோடு இருக்க வேண்டும். கர்த்தர் உங்களோடுகூட இருக்கும்போது கனமும் மகிமையும் ஐசுவரியமும் உங்களைத் தேடி வரும். தீர்க்கதரிசியாகிய அசரியா சொன்னார், “…சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்” (2 நாளா. 15:2).
தேவபிள்ளைகளே, நீங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தர் உங்களோடு இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாலமே எழுந்து, முழங்கால்படியிட்டு, கர்த்தர் உங்களோடு இருக்கிறாரா என்பதை தியானித்து அவரை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள். வாழ்நாளெல்லாம் அவரை துக்கப்படுத்தாதபடிக்கு, அவர் உங்களைவிட்டு விலகிவிடாதபடி சிறந்த பொக்கிஷத்தைப் பாதுகாப்பதுபோல அவரை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்.
ஒரு மனுஷனுடைய மேன்மை அவனுடைய செல்வத்தினாலோ, செல்வாக்கினாலோ, படிப்பினாலோ அல்லது ஞானத்தினாலோ ஏற்படுவதில்லை. அவனுடைய மேன்மை கர்த்தர் அவனோடு கூட இருப்பதில்தான் இருக்கிறது. கர்த்தர் தாவீதோடு கூட இருந்தார். அவன் மேலும் மேலும் விருத்தியடைந்தான். கர்த்தர் நோவாவோடு கூட இருந்தார். ஜலப்பிரளயத்திலிருந்து நோவா பாதுகாக்கப்பட்டார். கர்த்தர் ஏனோக்கோடு கூட இருந்தார். ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக் கொள்ளப்பட்டார்.
அப். பவுல் சொல்லுகிறார், “தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?” (ரோமர் 8:31). ஆம், கர்த்தர் உங்களோடுகூட இருக்கும்போது எந்த விரோதியும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது. எந்த பொல்லாத மனுஷனும் உங்களுக்கு விரோதமாய் சீற முடியாது. ‘உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறவன்’ என்றல்லவா அவர் வாக்குப் பண்ணியிருக்கிறார்!
கர்த்தர் யோசபாத்தோடு இருந்தார். எத்தனை பெரிய சாட்சி இது! உலகம் உங்களைப் பார்க்கும்போது உங்களோடுகூட கர்த்தர் இருக்கிறதை காணட்டும். கர்த்தருடைய பிரசன்னமும் சமுகமும் உங்களோடிருக்கிறதை காணட்டும். ஆவியின் வரங்களும், வல்லமைகளும் உங்களோடிருக்கிறதை காணட்டும். அன்று உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களோடு இருந்ததை உலகம் கண்டது. சீஷர்கள் புறப்பட்டு போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார்கள் (மாற்கு 16:20). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறாரென்பதை விசுவாசியுங்கள்.

நினைவிற்கு :- “கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” (சங். 118:6).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.