Appam - Tamil

Sep – 13 – கட்டளையிடுங்கள்!

வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக் குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள்(ஏசா.45:11)

நீங்கள் என்னிடத்தில் கேளுங்கள்; எனக்குக் கட்டளையிடுங்கள்! என்னும் வார்த்தைகள் எவ்வளவாய் நம்மை சந்தோஷப்படுத்துகின்றன? எனவே, வரும் காலம் எப்படியிருக்குமோ, என் குடும்பம் எப்படிச் செல்லுமோ, என் பிள்ளைகள் எப்படியிருப்பார்களோ என்றெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை.
வரும்காலம் கர்த்தருடைய கரத்திலிருக்கிறது. வேதம் சொல்லுகிறது, அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும் (தானி.2:22).
கர்த்தர் உங்கள் பிதாவாயிருக்கிறபடியால் நீங்கள் அவரிடத்தில் உரிமையோடு கேட்கிறீர்கள். கைரேகைப்படியோ, அல்லது கிரகங்களின் நிலைமைப்படியோ அல்லது தலைவிதியின்படியோ எதுவும் நேரிடுவதாகச் சொல்லுவது பொய்யானதாகும். பாபிலோன் ராஜாவுக்கு முன்பு தானியேல் சொன்னார்: அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்” (தானி. 2:21).
அந்த கர்த்தர் உங்களைப் பார்த்து, “நீங்கள் எனக்குக் கட்டளையிடுங்கள்” என்று சொல்லுகிறார். சற்று இதை சிந்தித்துப் பாருங்கள். அண்டசராசரங்களையும், ஜீவராசிகளையும் படைத்து சூரியன், சந்திரன், நட்சத்திரங்களையெல்லாம் இயங்க வைத்திருக்கும் ஆண்டவருக்கு நீங்கள் எப்படிக் கட்டளையிட முடியும்? அதுதான் நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்ற உரிமை. அவர் உங்களுக்குப் பிதா என்கிற பாசம். உங்களுக்கும், அவருக்கும் இடையிலுள்ள ஐக்கியமே அந்த சிலாக்கியத்தை ஏற்படுத்துகிறது அல்லவா?
கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளும்போது, அவருடைய குடும்பத்தில் நீங்கள் வந்து சேரும்போது, கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிக்கிறவராக இருக்கிறார். அவர் உங்களுடைய சொந்த பிதா! தகப்பனிடத்தில் பிள்ளை உரிமையோடு கேட்டுப் பெற்றுக்கொள்கிறதைப் போலவே நீங்கள் அவரிடத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளுகிறவர்களாயிருக்கிறீர்கள்.
யோசுவாவை நோக்கிப் பாருங்கள். கர்த்தரின் படைப்புகளை நோக்கி அவர் கட்டளையிட்டார். “சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் மேலும் தரித்து நிற்பாயாக” என்று சொன்னபோது உடனே அவைகள் தரித்து நின்றன. அவ்வாறு நீங்கள் கட்டளையிடும்படி, கர்த்தர் உங்களுக்கு அதிகாரங்களையும், ஆளுகையையும், வல்லமையையும் கொடுத்திருக்கிறார். நோய்களுக்கு நீங்கள் கட்டளையிடும்போது அவைகள் நீங்குகின்றன. அசுத்த ஆவிகளுக்குக் கட்டளையிடும்போது அவைகள் ஓடி மறைகின்றன.
தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குப் பாராட்டின அவருடைய கிருபைகளையெல்லாம் எண்ணிப்பாருங்கள். அவருடைய குடும்பத்தில் என்றென்றும் நிலைத்திருப்பீர்களா? நீங்கள் அவரிடத்தில் ஜெபிப்பதும் அவர் உங்களுக்குப் பதிலளிப்பதும், உங்கள் இருதயத்தின் வேண்டுதலையெல்லாம் அவர் உங்களுக்கு நிறைவேற்றித் தருவதும் எத்தனை பாக்கியமான காரியம்!

நினைவிற்கு :- நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் (1 சாமு. 12:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.