AppamAppam - Tamil

ஜூன் 16 – அக்கினி மயமான குதிரைகள்!

“இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்” (2 இரா. 6:17).

கர்த்தர் தம்முடைய ஜனங்களை பாதுகாப்பதானாலும் சரி, அல்லது தம்முடைய ஜனங்களுக்காக போராடி யுத்தம் செய்வதானாலும் சரி, அவர் உபயோகிக்கிற வழியே ஆச்சரியமானதாகவும், அதிசயமானதாகவும் இருக்கிறது பாருங்கள்! இங்கே தம்முடைய ஊழியக்காரனை பாதுகாக்கும்படி கர்த்தர் தம்முடைய அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் அனுப்பிக் கொடுத்தார்.

எலிசா ஒரு சாதாரணமான எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். எலிசாவோடுகூட இருந்தது ஒரேயொரு வேலைக்காரன் மட்டுமே. அந்த தேவ மனுஷன்மேல் பொறாமை கொண்ட சீரியா ராஜா அவனுக்கு விரோதமாக குதிரைகளையும், இரதங்களையும், பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; இவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துக் கொண்டார்கள் (2 இரா. 6:14). யார் எலிசாவுக்காக யுத்தம் செய்வது? யார் சீரியா ராஜாவின் கைகளில் இருந்து அவரை விடுவிப்பது? எலிசாவின் வேலைக்காரன் பதறினான். “ஐயோ என் ஆண்டவனே என்னச் செய்வோம்?” என்றான்.

அதற்கு எலிசா சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘பயப்படாதே அவர்களோடு இருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்’ என்றார். ஆம், எலிசாவுக்கு ஆவிக்குரிய கண்கள் இருந்தது. அந்தக் கண்களினால் கர்த்தர் தனக்கு ஆதரவாய் அனுப்பியிருக்கிற அக்கினிமயமான குதிரைகளையும், இரதங்களையும் கண்டார். ஆகவே, அவருடைய உள்ளம் பதறவில்லை.

கர்த்தர் உங்களுக்கு ஆதரவாக எத்தனை காரியங்களைச் செய்கிறார் பாருங்கள். “நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று” (சக. 2:5) கர்த்தர் சொல்லுகிறார். யோசுவாவின் புத்தகத்தையும், நியாயாதிபதியின் புத்தகத்தையும், I மற்றும் II இராஜாக்களின் புத்தகத்தையும் வாசிக்கும்போது, கர்த்தர் எவ்விதமாய் தம்முடைய ஜனங்களை பாதுகாத்தார், எப்படி தன் ஜனங்களுக்காக போராடினார், வழக்காடினார், யுத்தம் செய்தார் என்பதையெல்லாம் நீங்கள் அறியலாம்.

இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக சிசெரா யுத்தத்திற்கு வந்தபோது,  வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று என்றும், நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம் பண்ணின (நியா. 5:20) என்றும் வேதம் சொல்லுகிறது. அதுபோல இஸ்ரவேலருக்கு முன்பாக கர்த்தர் கானானியரை துரத்தும்படி குளவிகளை அனுப்பினார். ஆயிரக்கணக்கில் குளவிகள் பறந்து வந்து யுத்த வீரர்களைப் போல் நின்றன. அவைகள் கானானியர்களை துரத்தியடித்தன (யாத். 23:28, உபா. 7:20).

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தியர் துரத்தி வந்தபோது, கர்த்தர் அக்கினி ஸ்தம்பங்களை இரண்டு பேருக்கும் மத்தியிலே வைத்தார். எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாயிருந்தது. இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று (யாத். 14:20). தேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களைப் பாதுகாக்கிறவர். அவர் உங்கள்மேல் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார்.

நினைவிற்கு:- “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” (2 நாளா. 16:9).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.