AppamAppam - Tamil

ஜூன் 13 – அறியாயோ?

“யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்” (ஆதி. 28:16).

கர்த்தருடைய வாக்குத்தத்தங்களையும், அவருடனான உடன்படிக்கையையும் நீங்கள் மறந்து போவதாலேயே, அநேக நேரங்களில் கர்த்தர் உங்களுடன் இருப்பதை நீங்கள் உணராமல் இருக்கிறீர்கள்.

யாக்கோபு தன் அண்ணனுக்கு பயந்து வீட்டை விட்டு ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. முதன்முறை வீட்டை விட்டு தனிமையாய் செல்லுகிறான். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கலக்கத்துடன் செல்லுகிறான். பிரயாண நேரத்தில் சூரியன் அஸ்தமித்துவிட்டது. படுக்கையோ, தலையணையோ ஒன்றுமில்லை. தன் தலையின் கீழ் கல் ஒன்றை வைத்துக்கொண்டு நித்திரை செய்ய ஆரம்பித்தான். “எல்லோரையும் விட்டுச் செல்லுகிறேன்; கர்த்தரும் என்னைவிட்டு விலகிவிட்டாரோ?” என்று கண்ணீர் விட்டிருக்கக்கூடும்.

ஆனால் கர்த்தர் யாக்கோபை மறக்கவில்லை. யாக்கோபு ஆண்டவரை எண்ணாத சூழ்நிலையிலும் கர்த்தர் யாக்கோபுக்கு தரிசனமானார். “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர், நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும், உன் சந்ததிக்கும் தருவேன்” (ஆதி. 28:13) என்று வாக்களித்தார்.  யாக்கோபு நித்திரையிலிருந்து விழித்தபோது ‘மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். நான் இதை அறியாதிருந்தேன்’ என்றார். பல வேளைகளில் நீங்கள் கர்த்தருடைய சமுகத்தையோ, பிரசன்னத்தையோ அறியாமலிருக்கலாம். ஆண்டவருடைய அன்பைவிட்டு தூரமாய்ப் போயிருக்கலாம்.  எங்கே போனாலும் அவருடைய கரம் உங்களைப் பின்தொடரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

சிங்கக் கெபியிலே போடப்பட்டாலும் கர்த்தர் அங்கேயும் உங்களோடுகூட  இருப்பார் என்பதை  நீங்கள்  அறியீர்களோ? அக்கினி சூளை ஏழு மடங்கு சூடாக்கப்பட்டாலும் அதன் நடுவிலே அவர் உலாவ வல்லமையுள்ளவர் என்பதை நீங்கள் அறியீர்களோ? “நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது” (ஏசா. 43:2) என்று அவர் வாக்களித்திருக்கிறாரே.

யோனா பெரிய தீர்க்கதரிசிதான். ஆனால் அவர் எங்கே போனாலும் கர்த்தருடைய கரம் தொடர்ந்து தன்னைப் பிடிக்கும் என்பதை அறியாமலிருந்தார். ஆகவேதான் நினிவேக்கு செல்ல வேண்டிய அவர் தர்ஷீசுக்கு போகும்படி கப்பல் ஏறினார். தேவ சமுகத்துக்கு விலகி எங்கே ஓட முடியும்? கப்பல் பிரயாணத்திலும் கர்த்தர் கூட இருந்து கடலை கொந்தளிக்கச் செய்தார். கடலில் தூக்கி போடப்பட்டபோதும் பத்திரமாய் மீனால் விழுங்கப்படும்படி செய்தார். மீன் வயிற்றிலே கர்த்தர் யோனாவோடு இருந்து ஜீவனைப் பாதுகாத்தார். மீன் வெளியே கக்கிய போதும், கர்த்தர் யோனாவோடு இருந்து, மீண்டும் மகிமையான ஊழியத்தைத் தந்தார்.

தேவபிள்ளைகளே, அந்த கர்த்தர் உங்களோடுகூட எல்லா நேரங்களிலும் இருக்கிறார் என்பதை நீங்கள் அறியீர்களா?

நினைவிற்கு:- “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்” (சங். 139:7,8).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.