No products in the cart.
ஜூன் 12 – அந்நியோன்யம்!
“தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து…” (ஆதி. 2:15).
நம் கர்த்தர் அன்புள்ளவர் மட்டுமல்ல; அவர் அன்புக்காக ஏங்குகிறவரும்கூட. மனுஷனை சிருஷ்டித்தது முதல், தன் முழு அன்பையும் அவன் மேல் பொழிந்து, அவனோடு அந்நியோன்யமாய் ஐக்கியம் கொண்டார். சிருஷ்டிக்கப்பட்ட சாதாரண சிருஷ்டிப்பு, தன்னை சிருஷ்டித்த கர்த்தரோடு ஐக்கியம் கொள்வது எத்தனை விசேஷமானது!
‘மனுஷனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்’ என்று வேதம் சொல்லுகிறது. அப்படியானால், ஆதாமை சிருஷ்டித்தப்போது, ஏதேனுக்கு வெளியே சிருஷ்டித்திருக்கக்கூடும். ஏதேனுக்கு அழைத்துக் கொண்டு வந்தார் என்பது அப்பொழுதுதான் சரியாக இருக்கும்.
அதாவது முதலிலே பூமி. பூமியிலே ஒரு ஏதேன். ஏதேனில் ஒரு தோட்டம். இதை ஒரு ஆசரிப்பு கூடாரத்திற்கு ஒப்பிடலாம். பூமியை வெளிப்பிரகாரத்திற்கு ஒப்புமையாக எடுத்துக்கொண்டால், ஏதேனை பரிசுத்தஸ்தலத்திற்கும், அங்கிருந்த தோட்டத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஒப்பிடலாம். தேவன் தம்முடைய மகிமையினால் நிரப்புகிற ஒரு இடம் மகா பரிசுத்த ஸ்தலம். அதை அவர் தம்முடைய ஷெகினா மகிமையினால் மூடியிருந்தார்.
“ஏதேன்” என்கிற வார்த்தையை தியானித்துப் பாருங்கள். அதில் “தேன்” இருக்கிறதைக் காணலாம். ஏதேனில் தேனிலும் தெளிதேனிலும் மதுரமான கர்த்தருடைய பிரசன்னம் இருந்தது. ஒவ்வொரு நாளின் பகலின் குளிர்ச்சியான வேளையிலும் கர்த்தர் அன்போடு அங்கே உலாவி, அவர்களோடு பேசின வார்த்தைகள் ஆதாமினுடைய காதுகளிலே தேனாய் பாய்ந்து இருந்திருக்கக் கூடும். அவன் நித்தமும் கர்த்தரில் மனமகிழ்ச்சியாய் இருந்தான்.
இன்றைக்கு ஏதேன் தோட்டத்தைப்போல கர்த்தர் சபையை வைத்திருக்கிறார். அங்குள்ள ஏதேன் தோட்டத்தில் உள்ள பல வகை மரங்களைப் போல விசுவாசிகளை வைத்திருக்கிறார். ‘இரண்டு பேர், மூன்று பேர் என் நாமத்தினாலே கூடி வரும்போது, அவர்கள் மத்தியிலே வருவேன்’ என்று சொன்ன ஆண்டவர், சபையாகக் கூடி வரும்போது நம்முடைய மத்தியிலும் கடந்து வருகிறார். ஆகவேதான் தாவீது இதோ ‘சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமாய் இருக்கிறது’ என்று சொன்னார்.
சகல விருட்சங்களின் கனிகளையும் சாப்பிட்டு, சரீரத்திலும், ஆத்துமாவிலும் வளரும்படி கர்த்தர் அந்த விருட்சங்களை எல்லாம் தந்தார். அதைப்போல சபையில் தேவ வார்த்தைகளையும், உபதேசங்களையும் தந்திருக்கிறார். அதை உட்கொண்டு நீங்கள் ஆவியிலே பெலப்பட வேண்டியது அவசியம்.
ஏதேன் தோட்டத்தின் மத்தியிலே ஜீவவிருட்சம் இருந்தது. அந்த ஜீவ விருட்சம்தான் இயேசு கிறிஸ்து. அவரை நித்திய ஜீவனாய் உங்களுக்குத் தருகிறது ஜீவ விருட்சம். அவருடைய வார்த்தையிலே ஜீவன் இருக்கிறது. அது வல்லமையான காரியங்களைச் செய்கிறது. தேவபிள்ளைகளே, ஒவ்வொருநாளும் இயேசுவின் வார்த்தைகளை உட்கொண்டு, ஜீவனில் பெலனுள்ளவர்களாக இருங்கள்.
நினைவிற்கு:- “நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” (யோவான் 10:10).