AppamAppam - Tamil

ஜூன் 9 – அன்புகூர்ந்தது போல!

“கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” (எபே. 5:2).

அப். பவுல், அன்புக்கு முன்மாதிரியாக இயேசு கிறிஸ்துவைக் காண்பிக்கிறார். கொல்கொதா மேட்டிலே உங்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த அவரை நோக்கிப் பாருங்கள். அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்ட அவருடைய சரீரத்திலே வழிகிற ஒவ்வொரு துளி இரத்தமும் அவர் அன்புள்ளவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு போதகருடைய ஊழியத்தின் ஆரம்ப நாட்களில், அவருடைய பிரசங்கங்களெல்லாம் மிகவும் கண்டிப்புள்ளதாய் இருந்தது. இதை செய், அதை செய்யாதே என்று மிகவும் கடுமையாய் பிரசங்கம் பண்ணுவார். “பாவம் செய்கிற உனக்கு, ஐயோ!” என்று நியாயத்தீர்ப்பை கூறுவார்.

ஒருநாள் கர்த்தர் அவரைப் பார்த்து, “மகனே, உன்னுடைய பிரசங்கப் பீடத்தை சீனாய் மலையில் வைத்திருக்கிறாயா அல்லது கல்வாரி மலையில் வைத்திருக்கிறாயா?” என்று கேட்டார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன ஆண்டவரே சொல்லுகிறீர்? நான் ஜனங்களுடைய பாவங்களை கண்டித்து உணர்த்துகிறேன். அவர்கள் வழி விலகிப் போய் விடாதபடி மனங்கசந்து அழும்படி செய்கிறேன். இது சரிதானே’ என்றார்.

கர்த்தர் சொன்னார்: “மகனே, நீ செய்கிறது சீனாய் மலைப் பிரமாணம். சீனாய் மலையில் இடி முழக்கங்களும், மின்னல்களும் பயங்கரமாய் புறப்பட்டன. ஜனங்கள் நடு நடுங்கினார்கள். அங்கே மிகவும் கடுமையான 10 கட்டளைகள் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் கல்வாரி மலையோ, அன்பின் மலை. அன்பின் கயிறுகளினால் என் ஜனங்களை கட்டியிழுக்கிற மலை. அன்பினால் ஜனங்களுக்கு பாவ மன்னிப்பையும், மனதுருக்கத்தையும், இரக்கத்தையும் காண்பிக்கிற மலை. ஆகவே, பிரச்சனைகளோடும், கண்ணீரோடும் தொய்ந்து போய் வருகிற என் ஜனங்களுக்கு அன்பைக் காண்பி, மனதுருக்கத்தைக் காண்பி” என்றார்.

கல்வாரி மலையிலே நீங்கள் நிற்கும்போது, கிறிஸ்து உங்களில் அன்பு கூர்ந்தது போல, மற்றவர்களிலே அன்புகூர கடமைப்பட்டிருக்கிறீர்கள். புதிய ஏற்பாட்டின் பிரமாணம் இரண்டுதான். முதலாவது, தேவனாகிய கர்த்தரில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் அன்பு கூர வேண்டும். இரண்டாவது, நீங்கள் உங்களை நேசிக்கிறதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும். இதிலே நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசனமும் அடங்கியிருக்கிறது.

அப். பவுல், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும், அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை” (1 கொரி. 13:1,2) என்று சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் அன்பின் பாதையிலே நடந்துச்செல்லுங்கள்.

நினைவிற்கு:- “மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (ரோமர் 5:5).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.