AppamAppam - English

ஜூன் 8 – அன்பும், ஒருமனப்பாடும்!

“ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்” (1 பேதுரு 4:8).

தெய்வீக அன்பு, உள்ளங்களை இணைத்து அரவணைக்கிறது. பயத்தை புறம்பே தள்ளுகிறது. திரளான பாவங்களை மூடுகிறது. தெய்வீக அன்பு, பிரிவினைகளின் வல்லமைகளை நீக்குவதற்கும், ஆவியில் ஒருமனப்பாடு ஏற்படுவதற்கும் மிகவும் அவசியம்.

மனுஷனுடைய சரீரத்தில் தோலானது எலும்புகள், தசைகள், நரம்புகள் எல்லாவற்றையும் மூடி அவைகளை பாதுகாக்கிறது போலவே, தெய்வீக அன்புள்ளவர்கள் குடும்பத்தின் அன்பையும், ஐக்கியத்தையும் பாதுகாக்கிறார்கள். எந்த ஒரு மனுஷனுடைய உள்ளத்தில் தெய்வீக அன்பு இருக்கிறதோ, அவன் மற்றவர்களுடைய குறைகள், குற்றங்களைப் பொருட்படுத்தமாட்டான். அந்த தெய்வீக அன்பானது, சகலவற்றையும் தாங்குகிறது, சகலவற்றையும் சகிக்கிறது.

ஒரு முறை விபத்தில் சிக்கி மரித்த ஒருவருடைய சரீரத்தை பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். உள்ளேயிருந்த நுரையீரல்கள், குடல்கள், நரம்புகள் எல்லாம் வெளியே தெரிந்தது. பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. முதன்முறையாக அன்றுதான் இந்த பாகங்களைப் பார்க்க நேர்ந்தது.

அந்த பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு, அவர்கள் எல்லாவற்றையும் உள்ளே வைத்து தைத்துவிட்டார்கள். அந்த தோல் எல்லாவற்றையும் மூடி, எல்லா அருவருப்புகளையும் நீக்கியது.

அதைப்போலத்தான் தெய்வீக அன்பு எந்த மனுஷனுடைய உள்ளத்தில் இருக்கிறதோ, அவன் மற்றவர்களின் குறைகளையும், குற்றங்களையும், கசப்புகளையும், வைராக்கியங்களையும் குறித்து பொருட்படுத்தாமல், எல்லாவற்றையும் மறந்து, மன்னித்து, தெய்வீக அன்பிலே ஒருமனப்பாட்டைக் காத்துக்கொள்ளுவான்.

உங்களுடைய கிரியைகளில் அன்பு காணப்படட்டும். அன்பாகப் பேசுங்கள். ஊழியத்திற்கென கிராமங்களுக்குச் செல்லும்போது அந்த கிராம மக்கள் நமக்குக் கொடுப்பதற்கு அவர்கள் வசம் ஒன்றும் இல்லாவிட்டாலும், தங்கள் அன்பான உபசரிப்பை தவறாமல் கொடுப்பார்கள். பானையில் உள்ள குளிர்ந்த தண்ணீரை குடிக்கக் கொடுத்து பாசத்தோடு உபசரிப்பார்கள். அந்த அன்பு இருதயத்தை மகிழ்வித்து விடுகிறது.

அன்பாய் முகத்தை வைத்திருப்பது இன்னொரு கிருபையாகும். கனிவான முகத்தோற்றம் கவலைகளை ஆற்றி விடுகிறது. இயேசுவினுடைய முகத்தில் அன்பும், கனிவும் இருந்தபடியினால்தான் வாழ்க்கையில் பல்வேறுபட்ட மக்கள் அவரிடத்தில் ஓடி வந்தார்கள். ஆயக்காரரும், பாவிகளும்கூட நெருங்கிப் பழகினார்கள்.

தேவபிள்ளைகளே, உங்களுடைய செயல் எல்லாம் தெய்வீக அன்பினால் நிரம்பினதாய் இருக்கட்டும். நீங்கள் மற்றவர்களுக்கு அன்பு பாராட்டும்போது, அவர்கள் நிச்சயமாகவே உங்களிடத்தில் பல மடங்கு அதிகமாய் அன்பு பாராட்டுவார்கள். மட்டுமல்ல, உங்களிலே கிறிஸ்துவைக் காண்பதற்கு அது ஏதுவாயிருக்கும்.

நினைவிற்கு:- “அன்பு சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்” (1 கொரி. 13:7).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.