No products in the cart.
ஜூன் 5 – அன்பே பெரியது!
“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது” (1 கொரி 13:13).
உலகத்திலுள்ள எல்லா வார்த்தைகளிலும் இனிமையான வார்த்தை ஒன்று உண்டென்றால், அது “அன்பு” என்ற வார்த்தைதான். அதே நேரத்தில், நீங்கள் உண்மையான அன்பை அறிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். தெய்வீகமான அன்புமுண்டு, போலியான அன்புமுண்டு. பெற்றோரின் அன்புமுண்டு. நண்பர்களின் அன்புமுண்டு, சகோதர, சகோதரிகளின் அன்புமுண்டு, கணவன் மனைவின் அன்புமுண்டு. உண்மையான அன்பு மிகச் சிறந்ததாய் இருக்கிறது. அன்பே பெரியது என்று அப். பவுல் குறிப்பிடுகிறார்.
கர்த்தர் இயற்கையாகவே மனிதனுடைய உள்ளத்தில் ஓரளவு அன்பை வைத்திருக்கிறார். சிலருக்கு கொடுக்கும் அன்பு உண்டு. சிலருக்கு பெற்றுக் கொள்ளும் அன்பு உண்டு. தாய்க்கு குழந்தையின் மேல் எங்கிருந்தோ ஒரு இனிய அன்பு வருகிறது. அந்த அன்பினால் மனதுருகி குழந்தைக்கு பால் கொடுக்கிறாள். சில தாய்மார்களுடைய அன்பு பார்க்க ஆச்சரியமாயிருக்கும். துன்மார்க்கமான பிள்ளையையும்கூட, அவன் கொலைபாதகனாக இருந்தாலும், தாய் நேசித்துக் கொண்டேயிருப்பாள்.
தாய்ப் பசுவைப் பாருங்கள்! காலை நேரத்தில் கன்றுக் குட்டிக்கு பால் கொடுக்கும்படி தேடுகிறது. கன்றுக்குட்டியைக் காணாவிட்டால் அது போடுகிற சத்தம் வீட்டையே அதிரப் பண்ணிவிடும். கன்றுக் குட்டியும் வாலை ஆட்டி ஆட்டி தாய் பசுவை முட்டிக் கொடுத்து பால் குடிக்கும்போது, தாய்க்கும் சந்தோஷம், குட்டிக்கும் சந்தோஷம். தாய் அந்த அன்பை வெளிப்படுத்த கன்றுக்குட்டியை அன்போடு நக்கிக் கொடுக்கும். அந்த அன்பினால் குட்டியின்மேல் அவ்வளவு அழுக்கு இருக்குமே, அதை நக்கிக் கொடுக்கலாமா என்று தயங்காது. அன்பு தியாகம் செய்ய அழைக்கிறது.
தேவபிள்ளைகளே, தாயின் உள்ளத்தில் அன்பு வைத்தவர், பசுவின் உள்ளத்தில் பாசத்தை வைத்தவர், தம்முடைய உள்ளத்தில் எவ்வளவு அதிக அன்பு வைத்திருப்பார்! ஆகவேதான் “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று வேதம் சொல்லுகிறது. அந்த தெய்வீக அன்பு தான் உங்களைத் தேடி வந்தது. உங்களைத் தூக்கி எடுத்தது. உங்களைக் கழுவி சுத்திகரித்தது. தம்முடைய பிள்ளைகளாய் மாற்றிக் கொண்டது. அந்த தெய்வீக அன்பின் நிமித்தம் பரலோக ராஜாவான இயேசு, அடிமையைப் போல பூமிக்கு இறங்கி வந்தார். அந்த அன்பினால்தான் பாரமான சிலுவையைத் தூக்கிக் கொண்டு நடந்து தம்மையே பலியாக அர்ப்பணித்தார்.
நீங்கள் வேதத்தை வாசித்துப் பார்த்தால் 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில் ஆவியின் வரங்களைக் குறித்து பவுல் எழுதுகிறதையும், 14-ம் அதிகாரத்தில் வரங்களை பயன்படுத்துகிற முறைகளைப் பற்றி எழுதுகிறதையும், இரண்டுக்குமிடையே உள்ள 13-ம் அதிகாரத்தில் அன்பை முழுமையாக வைக்கப்பட்டிருக்கிறதையும் காணலாம்.
தேவபிள்ளைகளே, வரங்களும், வல்லமைகளும் உங்களுக்குத் தேவை. ஆனால் அவை அன்போடு செயல்படுத்தப்பட வேண்டும். அதுதான் உங்களுக்கு ஆசீர்வாதம்.
நினைவிற்கு:- “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (1 கொரி. 13:4).