No products in the cart.
ஜூன் 2 – அன்பாயிருந்தார்!
“இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார்” (யோவான் 11:5).
இயேசு அன்பாயிருந்தார், அன்பாயிருக்கிறார், இன்றைக்கும் உங்களுடைய குடும்பங்களின்மேல் அவர் அன்பும், அக்கறையுமுள்ளவராயிருக்கிறார். அன்றைக்கு பெத்தானியாவில் இருந்த ஒரு சிறிய குடும்பத்தின்மேல் இயேசு கிறிஸ்து அன்பு வைத்தார். ஒருவேளை அந்த வீட்டில் இருந்தவர்களுக்கு தாய், தகப்பன்மார் இல்லாமல் இருந்திருக்கலாம். செல்வமோ, வசதியோ இல்லாதவர்களாய் இருந்திருக்கலாம். ஆனாலும், இயேசு அந்த குடும்பத்தை நேசித்தார். தாய் தகப்பனற்ற அவர்களுக்கு நேசிக்கிற தாய் தகப்பனானார். அவர்கள் வீட்டில் உணவு அருந்தி அங்கு தங்கினார்.
தேவபிள்ளைகளே, இன்றைக்கும் நீங்கள், “இயேசுவே என் உள்ளத்திலே வாரும். என்னோடு தங்கியிரும்” என்று அழைக்கும்போது, நிச்சயமாகவே அவர் உங்களுக்குள் வருவார். மட்டுமல்ல, உங்கள்மீது அன்பு செலுத்துவார். இயேசு சொன்னார், “இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன் ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத்திறந்தால் அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன். அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்” (வெளி. 3:20).
கர்த்தருடைய அன்பை ஒவ்வொரு நாளும் ருசியுங்கள். வேதம் சொல்லுகிறது, “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங். 103:13). “ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்” (ஏசா. 66:13). “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” என்று வாக்களிக்கிறார் (ஏசா. 49:15).
தகப்பனைப் போலவும், தாயைப் போலவும் நேசிக்கிற கிறிஸ்துவின் அன்பிலே நிலைத்திருங்கள். ஒருபோதும் உங்களுடைய பாவங்களினாலே அவரை துக்கப்படுத்தி விடாதிருங்கள். அவர் உங்களுடைய உள்ளத்திலே தங்கியிருப்பது எத்தனை மேன்மையான காரியம்! அவர் உங்கள் உள்ளத்தில் வரும்போது, முதலில் தருகிற ஆசீர்வாதம் பாவமன்னிப்பின் சந்தோஷம்தான்.
இந்த உலகம் அன்புக்காக ஏங்குகிறது. அன்பு குறைந்து போகும்போது, மக்கள் வாழ்க்கையை வெறுத்து விடுகிறார்கள். என்னை உண்மையாக நேசிக்க இந்த உலகத்தில் ஒருவருமேயில்லை என்று கவலைப்படுகிறார்கள். மனித அன்பு மறைந்து போகலாம். ஆனால் உங்கள்மேல் கிறிஸ்து வைத்திருக்கிற அன்போ, ஒருபோதும் குறைந்து போவதில்லை. அவர் எவ்வளவாய் உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
மரித்துப்போன லாசருவை, இயேசு உயிரோடு எழுப்பியது எத்தனை மகிமையான அற்புதம்! தேவபிள்ளைகளே, நீங்கள் தேவனிடத்தில் அன்பு வைப்பீர்களென்றால், உங்கள் வாழ்க்கையெல்லாம் அற்புதங்கள் நடந்து கொண்டேயிருக்கும்.
நினைவிற்கு:- “என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்” (எரே. 33:3).