AppamAppam - Tamil

ஜூன் 1 – அன்பு கூர்ந்தாளே!

“இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே” (லூக். 7:47).

கர்த்தர் பாராட்ட வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்து பாராட்டுகிறவர். நன்மையான காரியங்களைக் காணும்போது, உடனே பாராட்டி உற்சாகப்படுத்துகிறார். இங்கே ஒரு பெண்மணியை சுட்டிக் காண்பித்து, “இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே” என்று சொல்லுகிறார். கர்த்தரிடத்தில் நல்ல பெயர் பெறுவது எவ்வளவு பாக்கியமான காரியம்! ஒலிம்பிக்கில் ஓடி பரிசைப் பெறுவதைப் பார்க்கிலும், கல்வியில் உயர்ந்த பட்டங்களைப் பெறுவதைப்பார்க்கிலும், கர்த்தரிடத்திலிருந்து ‘என் மகன் என்னில் மிகவும் அன்பு கூர்ந்தான்’ என்று வாங்கும் பட்டமே சிறந்த பட்டமாகும்.

கர்த்தர் ஒருமுறை நாத்தான்வேலைக் குறித்து, “அவன் கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். நூற்றுக்கு அதிபதியைக் குறித்து, “இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை” என்று சாட்சி கொடுத்தார் (மத். 8:10). கானானிய ஸ்திரீயைப் பார்த்து,“ஸ்திரீயே உன் விசுவாசம் பெரியது” என்றார். இரண்டு காசு காணிக்கைப் போட்ட விதவையைப் பற்றி “மற்ற எல்லாரைப் பார்க்கிலும் இவள் அதிகமாய்ப் போட்டாள்” என்றார்.

இயேசு இவ்விதமாய் பலரைக் குறித்து பாராட்டி நற்சாட்சி வழங்கிய போதிலும், தன் பாதத்துக்கு தைலம் பூசி, கண்ணீரினால் நனைத்து, தலைமுடியினால் துடைத்த பாவியாகிய ஸ்திரீயைப் பற்றி “இவள் என்னிடத்தில் மிகவும் அன்பு கூர்ந்தாளே” என்று பாராட்டியது மிகவும் சிறந்ததாகும். கர்த்தர் உங்களைக் குறித்து என்ன சாட்சி கொடுப்பார்?

அன்றைக்கு அன்பு கூராமல் போன எபேசு சபையைப் பார்த்து கர்த்தர் துக்கத்தோடு, “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் குறை உண்டு” என்றார் (வெளி. 2:4). கர்த்தர் ஒரு மனிதனிடம் அவனுடைய காணிக்கையையோ, அவனுடைய நன்கொடையையோ, அவனுடைய ஊழியத்தையோ எதிர்பார்க்காமல், முதலாவது அவனுடைய அன்பையே அவர் எதிர்பார்க்கிறார்.

உங்களுடைய ஊழியத்தைவிட, நீங்களே அவருக்கு முக்கியம். உங்களுடைய பிரயாசங்கள் முக்கியமல்ல, நீங்கள் கர்த்தரிடத்தில் கூருகிற அன்புதான் முக்கியம். வேதம் சொல்லுகிறது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும், முழு ஆத்துமாவோடும் அன்புகூருவாயாக” (உபா. 6:5).

தேவபிள்ளைகளே, கர்த்தரிடத்தில் அன்புகூர முடியவில்லை என்று யாராலும் சொல்லவே முடியாது. கர்த்தரிடத்தில் அன்புகூருவதற்கு ஆயிரம் காரணங்களுண்டு. நீங்கள் பாவியாய் இருக்கும்போது, அவர் உங்களைத் தேடி வந்தாரே! உங்கள் பாவங்களற தம் இரத்தத்தினால் கழுவினாரே! உங்களைப் பின் தொடர்ந்த தலைமுறை சாபத்தின் முதுகெலும்பைத் தகர்த்தாரே! உங்கள் வியாதிகளை எல்லாம் தன் மேல் ஏற்றுக்கொண்டு, உங்கள் பெலவீனங்களை எல்லாம் சிலுவையில் சுமந்தாரே! அவரில் அன்புகூருவீர்களா?

நினைவிற்கு:- “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:16).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.