AppamAppam - Tamil

மே 30 – ஆசையாய்த் தொடர்கிறேன்!

“நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (பிலி. 3:12).

கிறிஸ்தவ வாழ்க்கையில் நீங்கள் ஆசையாய்த் தொடர வேண்டிய பாதை ஒன்று உண்டு. அந்த பாதைதான் கிறிஸ்துவின் அடிச்சுவடுகள் காண்பிக்கும் பாதை. கிறிஸ்துவின் சாயலில் மறுரூபமாக்கப்படும் பாதை. “நான் அடைந்தாயிற்று; முற்றும் தேறினவன் என்று எண்ணாமல் ஆசையாய்த் தொடர்கிறேன்” என்று அப். பவுல் தாழ்மையோடு சொல்லுகிறதைப் பாருங்கள்.

கிறிஸ்தவ ஜீவியம் என்பது படிப்படியாக வளர்ந்து பெருக வேண்டிய ஜீவியம். நாளுக்கு நாள் தேவனிடத்திலிருந்து கிருபையின்மேல் கிருபை பெற வேண்டிய ஜீவியம். விசுவாசமாய் ஜீவித்து பெலத்தின் மேல் பெலனடைய வேண்டிய ஜீவியம். ஆழமான ஜெபஜீவியத்திற்குள் கடந்து சென்று, மகிமையின்மேல் மகிமை பெற வேண்டிய ஜீவியம். நான் அடைந்தாயிற்று அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

உங்களுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய் சேர்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரே வருடத்தில் அவர்களால் எல்லா வகுப்புகளையும் படித்து முடித்து விட முடியாது. சிறிய வகுப்பிலிருந்து ஒவ்வொரு வகுப்பாக ஒவ்வொரு வருடமும் முன்னேறிக் கொண்டே வருகிறார்கள். அறிவைப் பெறுகிறார்கள், ஞானத்தை பெறுகிறார்கள், விவேகத்தை பெறுகிறார்கள். ஆசையாய் தொடர்ந்து படித்துக் கொண்டே முன்னேறிச் செல்லுகிறார்கள்.

அதைப்போலவே, உங்களுக்கும் ஆவிக்குரிய ஜீவியத்தில் கர்த்தர் பல பாடங்களையும், அனுபவங்களையும் ஒவ்வொரு நாளும் தந்துகொண்டே வருகிறார். பொன்னிலிருந்து களிம்பை நீக்குவதுபோல, உங்கள் வாழ்க்கையிலுள்ள குறைபாடுகளையெல்லாம் நீக்குகிறார். ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பை ருசிக்கும்போது அன்பின் ஆழங்களுக்குள்ளே கொண்டுபோய்க் கொண்டேயிருக்கிறார்.

ஆவிக்குரிய ஜீவியத்திற்கு துவக்கமும், முடிவும் இருக்கின்றன. சிலுவையண்டை நின்று பாவமன்னிப்பை பெறுவது துவக்கம். கிறிஸ்துவைப்போல பூரணமுள்ளவர்களாய் விளங்க வேண்டும் என்பதே முடிவு. அப். பவுல் சொல்லுகிறார்: “எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ. 1:28).

இரட்சிப்பிலே கிறிஸ்தவம் பூரணமாகிவிடாது. ஞானஸ்நானத்திலே நிறைவு பெற்றுவிடாது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றுவிட்டால் எல்லாவற்றையும் விட்டுவிடுவோம் என்பது அர்த்தமில்லை. தேவனுக்கு முன்பாக நீங்கள் உங்களைத் தாழ்த்தி, அவருடைய நுகத்தடியை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவின் பூரணத்தை அடைய ஆழமான வாஞ்சையும், ஆசையும், தாகமும் இருந்துகொண்டேயிருக்க வேண்டும். தேவபிள்ளைகளே, தொடர வேண்டிய ஆசையாய்த் தொடருவீர்களா?

நினைவிற்கு:- “…பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்” (எபி. 6:2,3).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.