AppamAppam - Tamil

மே 28 – ஆறுதலின் தேவன்!

“நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 1:3).

நம் தேவன் ஆறுதலின் தேவன், இரக்கங்களின் தேவன், அவர் உங்களை ஆற்றித் தேற்றுகிறவர். மட்டுமல்ல, தம்முடைய பொற்கரத்தினால் உங்களுடைய கண்ணீர் யாவையும் தொட்டுத் துடைக்கிறவர்.

அப். பவுல், “தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” (2 கொரி. 1:4) என்று எழுதுகிறார்.

நீங்கள் பல சூழ்நிலைகளில் ஆறுதலற்றவர்களாய் திகைக்கிறீர்கள். மற்றவர்கள் எவ்வளவுதான் ஆறுதல்படுத்தினாலும், உங்களுடைய உள்ளம் ஆறுதலுக்கு இடங்கொடாமல் தேம்பி திகைத்துக்கொண்டேயிருக்கிறது. அதுபோலவே மற்றவர்களுக்கும் நீங்கள் சில சந்தர்ப்பங்களிலும், சூழ்நிலைகளிலும் ஆறுதல்படுத்த முடியாமல், வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறீர்கள். அப். பவுல், “தேவனே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என்று சொல்லுகிறார்.

ஆகார் வனாந்தரத்தில் ஆறுதலற்ற நிலையிலே தவித்தாள். அவளுடைய பிள்ளை தாகத்தினால் சாகக்கிடந்தது. ஆபிரகாம் அவளை அனுப்பி வைத்தபோது, அவளுக்கு கொடுத்தனுப்பியதெல்லாம் ஒரு துருத்தி தண்ணீரும், சில அப்பங்களும்தான். அவை தீர்ந்தபோது அவள் தத்தளித்தாள். வனாந்தரத்தில் உணவுக்கு எங்கே செல்வாள்? ஆறுதலற்ற நிலையில் அவள் சத்தமிட்டு அழுதாள்.

கர்த்தர் அவளைக் கைவிடவில்லை. அடிமைப் பெண்தானே என்று அலட்சியம் செய்யவில்லை. கர்த்தர் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்பொழுது அவள் தண்ணீர் துரவைக் கண்டு துருத்தியிலே தண்ணீர் நிரப்பி பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். “தேவன் பிள்ளையுடனேகூட இருந்தார்” (ஆதி. 21:20) என்று வேதம் சொல்லுகிறது. கர்த்தர் வெறும் ஆறுதலான வார்த்தைகளை மாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கிறவர் அல்ல. ஆறுதலோடுகூட அற்புதத்தையும் செய்கிறவராயிருக்கிறார். குறைவையெல்லாம் நீக்கி நிறைவாக்குகிறவராகவும் இருக்கிறார்.

கர்த்தர் ஆறுதலற்ற அன்னாளுக்கு ஆறுதலின் மகனாக சாமுவேலைக் கொடுக்கவில்லையா? விசுவாசத்தோடு காத்திருந்த சாராளுக்குக் கர்த்தர், “புன்னகையான ஈசாக்கை” கொடுத்து ஆறுதல்படுத்தவில்லையா? அற்புதங்களைச் செய்கிற தேவனுடைய கரம் இப்பொழுது உங்களையும் ஆறுதல்படுத்துகிறது.

கர்த்தருடைய அருமையான வார்த்தைகளும், வாக்குத்தத்தங்களும் உங்களை மிகவும் ஆறுதல்படுத்துகின்றனவாய் இருக்கின்றன. நீங்கள் ஆறுதலற்ற நேரங்களில் ஏசாயா தீர்க்கதரிசி எழுதிய புஸ்தகத்தின் அதிகாரங்களைத் திரும்பத் திரும்ப வாசியுங்கள். ஆ! அந்த வார்த்தைகள் எல்லாம் அவ்வளவு ஆறுதலானவை. தேவபிள்ளைகளே, கர்த்தரே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் என்பதை மறந்துபோகாதேயுங்கள்.

நினைவிற்கு:- “என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசுங்கள்” (ஏசா. 40:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.