AppamAppam - Tamil

மே 24 – புறப்பட்டுப்போய்!

“வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய்..” (மத். 28:18,19).

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறபடியினால் உங்களால் புறப்பட முடிகிறது. அதை நீங்கள் அறியாவிட்டால், அல்லது விசுவாசிக்காவிட்டால் புறப்பட்டு போக முடியுமா? தயாராய் இல்லாமல் புறப்பட்டு போவது ஆபத்தில் முடியும்.

ஆனால் கர்த்தர் தந்த அதிகாரத்தோடும், வல்லமையோடும் புறப்பட்டுப் போனால், நிச்சயமாகவே வெற்றியை அடைய முடியும். கர்த்தருக்கு பூமியிலே மாத்திரம் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் அவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுவே சகல அதிகாரம் என்பது.

வேதம் சொல்லுகிறது, “இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்… எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலி. 2:10). ஆகவேதான் அவர் புறப்பட்டு போங்கள் என்று சொல்லும்போது, அவருடைய அதிகாரத்தோடும், வல்லமையோடும் மாத்திரமல்ல, அவருடைய நாமத்தோடும் முன்னேறிச் செல்லுகிறீர்கள். கிறிஸ்து தோல்வியடைவதில்லை. அவருடைய நாமத்தில் செல்லும்போது நீங்களும் ஒருநாளும் தோல்வியடைவதில்லை.

கர்த்தர் உங்களை ஒநாய்களுக்குள் ஆட்டுக்குட்டியை அனுப்புவதைப்போல அனுப்புகிறார். ஆனால் அவைகள் எல்லாவற்றுக்கும் இருக்கிற வல்லமையைப் பார்க்கிலும், உங்களுக்கு அதிக வல்லமையுண்டு. கர்த்தர் உங்களுடைய பட்சத்திலிருக்கிறார். தேவதூதர்களும் உங்களுடைய பட்சத்தில் இருக்கிறார்கள். முழு பரலோகமும், பரிசுத்தவான்களும் உங்களுடைய பட்சத்திலேயே இருக்கிறார்கள். அந்த சூழ்நிலையில்தான் நீங்கள் புறப்பட்டு போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

புறப்பட்டு போ என்று ஒரு யுத்த வீரனுக்கு அரசாங்கம் ஆணையிடும்போது, வெறுமையாய் அனுப்பிவிடாது. யுத்த உடையையும், போர்புரியக்கூடிய போர்க் கருவிகளையும் கொடுத்து அனுப்பும். அவனை எதிரிகள் தாக்கும்போது பாதுகாத்துக் கொள்ள போதுமான ஆயுதங்களையும், வழிமுறைகளையும் செய்து கொடுத்துதான் அனுப்பும். அதுபோலவே கர்த்தர் உங்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்து அனுப்புகிறார். இயேசு சொன்னார், “இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது” (லூக். 10:19). அது எத்தனை வல்லமையுள்ள வாக்குத்தத்தம்!

நீங்கள் புறப்பட்டுப் போங்கள் என்று சொல்லுகிற ஆண்டவர் உங்களை வரங்களினாலும், வல்லமையினாலும் இடைக்கட்டி அனுப்புகிறார். ஒருவனும் எதிர்த்து நிற்கக்கூடாத வாக்கினாலும் வல்லமையினாலும் பலப்படுத்துகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் கட்ட முற்படும்போது அது கட்டப்படும். நீங்கள் கட்டவிழ்க்க முற்படும்போது அது கட்டவிழ்க்கப்படும்.

நினைவிற்கு:- “பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்” (மத். 16:19).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.