No products in the cart.
மே 14 – ஆசீர்வதியுங்கள்!
“தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:10).
கர்த்தரைத் தஞ்சமாய் கொண்டிருப்பது எத்தனை பாக்கியமானது! கர்த்தருடைய இனிமையான ஆசீர்வாதங்களை ஒவ்வொரு நாளும் புசிப்பது எத்தனை மேன்மையானது! நீங்கள் கையிட்டு செய்யும் எல்லாக் காரியங்களிலும் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்திருக்கிறதினாலே, நீங்களும் மற்றவர்களை மனதார ஆசீர்வதியுங்கள். வெறும் சொல்லினால் மட்டுமல்லாமல், செயலினாலும், பொருட்களினாலும், பணத்தினாலும், விளைபொருட்களினாலும் ஆசீர்வதியுங்கள்.
வேதம் சொல்லுகிறது, “உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லா கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்” (உபா.15:9,10).
ஆசீர்வாதத்தின் வழியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான்’ என்று வேதம் சொல்லுகிறது. உங்களுடைய உள்ளத்திலே ஒரு இரக்க சிந்தை எப்போதும் இருக்கட்டும். மனதுருக்கம் இருக்கட்டும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து தெய்வீக அன்பின் ஆறுகள் மற்றவர்களை நோக்கி தாராளமாய்ப் பெருக்கெடுத்து ஓடட்டும். இதனால் நீங்கள் ஒருபோதும் குறைந்து போவதில்லை.
உலகத்தாரைப் பாருங்கள். அவர்கள் பேர் புகழுக்காகக் கொடுக்கிறார்கள். ஆனால் நீங்களோ, கர்த்தர் மேல் அன்பு வைத்திருக்கிறதினால் கொடுக்கிறீர்கள். நீங்கள் அவருக்குக் கொடுப்பதற்கு முன்பாகவே அவர் உங்களுக்காக எல்லாவற்றையும் கொடுத்து விட்டாரே! சிலுவையிலே தம்முடைய இரத்தத்தையும், மாம்சத்தையும் கொடுத்தாரே! ஜீவனையும் அர்ப்பணித்தாரே! அந்த ஆண்டவரை எண்ணிக் கொடுப்பது எத்தனை மகிழ்ச்சியான பாக்கியம்!
நீங்கள் கொடுக்கும்போது, மனுஷனைப் பிரியப்படுத்தும் நோக்கத்தில் கொடுக்காமல், கர்த்தருடைய கரத்திலே கொடுக்கிறீர்கள் என்கிற உணர்வோடு கொடுங்கள். அப்பொழுது இம்மையிலும் மறுமையிலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் ஏழைக்கு இரங்குவது, கர்த்தரின் கண்களுக்கு மட்டுமே தெரியவேண்டும் என்பதில் உறுதியாய் இருங்கள்.
சில வேளையில் நீங்கள் கொடுப்பதை கர்த்தர் அப்படியே உங்களுக்குத் திருப்பி கொடுப்பார். சில வேளையில் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை வாக்குப்பண்ணுவார். முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகவும் பலனைப் பெருகப்பண்ணுவார். நீங்கள் ஏழை எளியவர்களுக்குத் தருவதைக் கர்த்தர் தனக்கே தந்ததாகக் கொள்ளுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நினைவிற்கு:- “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்.25:40).