No products in the cart.
ஏப்ரல் 04 – நன்மைக்காகத் துதியுங்கள்!
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்” (2 கொரி. 9:15).
கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையிலே செய்திருக்கிற நன்மைகளும், உங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களும் எண்ணற்றவை. அவர் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார். உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார். நித்தியத்துக்குரிய ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார். இத்தனை ஆசீர்வாதங்களைத் தந்திருக்கும் அவரைத் துதிக்காமல் இருக்கலாமா?
கொஞ்சகாலம் வாழப்போகும் இந்த உலக வாழ்க்கையிலும்கூட உங்களுக்கு பிரயோஜனமாய் இருக்கும்படி கர்த்தர் எவ்வளவு அருமையானவைகளை சிருஷ்டித்திருக்கிறார்! ஒளி வீசும் சூரியன், குளுமையான சந்திரன், எண்ணிலடங்கா நட்சத்திரங்கள், நல்ல குடிநீர், நல்ல மழை, சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று, உண்பதற்கு வகை வகையான கனிகளும் உணவுகளும் என இவை அனைத்தும் கர்த்தருடைய ஈவுகள் அல்லவா! தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் என்று நன்றியோடு துதிப்பீர்களா?
தாயின் அன்பு எத்தனை மேன்மையானது! தகப்பனுடைய அக்கறை எத்தனை மேலானது! உலகத்திலே சகோதர, சகோதரிகளைத் தந்து, குடும்பத்தைத் தந்து மேன்மைப்படுத்தியது கர்த்தருடைய கிருபை அல்லவா? விலையேறப்பெற்ற இரட்சிப்பைத் தந்து, பாவமன்னிப்பின் நிச்சயத்தைக் கொடுத்தது பெரிய கிருபையல்லவா? சபை கூடுதலையும் தேவனுடைய ஊழியக்காரரின் ஐக்கியத்தையும் கொடுத்து, உங்களைப் பரலோகக் குடும்பத்தோடு இணைத்துவிட்டது பெரிய பாக்கியம் அல்லவா? தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக அவரைத் துதியுங்கள்.
தேவன் கொடுத்த சமாதானத்திற்காக, பரலோக சந்தோஷத்துக்காக, நித்திய ஜீவனுக்காக, தெய்வீக இளைப்பாறுதலுக்காக நீங்கள் எவ்வளவாய்க் கர்த்தரைத் துதிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள்! கர்த்தர் உங்களுடைய ஜெபத்தையெல்லாம் கேட்டு பதிலளிப்பதற்காகவும், கண்ணீரை எல்லாம் துடைத்து உங்கள் துக்கத்தை சந்தோஷமாய் மாற்றுவதற்காகவும் அவரைத் துதியுங்கள். தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்களுக்காக அவரைத் துதியுங்கள்.
பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்பி, உன்னத பெலனையும் பரலோக வல்லமையையும் உங்களுக்குள்ளே கொண்டுவந்தாரே! ஆவியின் வரங்களால் உங்களை நிரப்பி, தமது கரங்களில் எடுத்து பயன்படுத்துகிறாரே! இனிமையான ஆவியின் கனிகளை உங்களுக்குள்ளே வைத்து வைத்தாரே! அவரைத் துதிக்காமல் இருப்பது எப்படி? தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்திக்கொண்டேயிருங்கள்.
தேவபிள்ளைகளே, உங்கள் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உங்கள் நோய்களையெல்லாம் குணமாக்கி, பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, நன்மையினாலும், கிருபையினாலும் உங்களை முடிசூட்டி, கழுகுக்கு சமானமாய் உங்கள் வயதைத் திரும்ப வால வயதைப் போலாக்குகிற அருமை இரட்சகரைத் துதித்து மகிழ்வீர்களாக!
நினைவிற்கு:- “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” (சங். 23:5).