AppamAppam - Tamil

மார்ச் 29 – ஜெயம் கொள்ளுகிறவர்கள்!

“நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” (ரோமர் 8:37).

இந்த உலகம் அநியாயக்காரர்களாலும், அக்கிரமக்காரர்களாலும் நிறைந்திருக்கிறது. மேலும், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக வான மண்டலத்திலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளும் எப்போதும் போராடிக் கொண்டேயிருக்கிறது. எல்லாப் பக்கமும் போராட்டங்களும், துன்பங்களும் அலையலையாய் வருவதுபோலத் தோன்றினாலும், கர்த்தர் ஜெயவேந்தனாய் எப்போதும் உங்களோடுகூடவே இருக்கிறார்.

ஒருமுறை ஒரு அருமையான போதகர் மிகவும் மனம் சோர்ந்துபோனார். சபை ஊழியம் அவருக்கு மிகுந்த பாரமாகவும், தாங்கக்கூடாததாகவும் இருந்ததே அதன் காரணம். அவருடைய குடும்பத்திலும் பல பிரச்சினைகள் இருந்தன. இதனால் அவர் நரம்புத்தளர்ச்சி உள்ளவராகி படுத்த படுக்கையாகிவிட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருடைய நண்பனும், கர்த்தருடைய ஊழியக்காரனுமாகிய ஒருவர் வந்து சந்தித்து, “நண்பனே, நீங்கள் மனம் சோர்ந்துபோகக்கூடாது. நீங்கள் எழுந்து உட்கார்ந்து உங்களுக்கு நன்மை செய்த ஒவ்வொருவரையும் சிந்தித்துப் பார்த்து நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுங்கள். அப்போது உங்களுடைய உள்ளத்திலுள்ள பாரம் குறையும்” என்று சொன்னார்.

ஆகவே அவருக்கு உதவி செய்த பலரை நினைவுகூர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், ஆசீர்வதித்தும் கடிதம் எழுதத் தொடங்கினார். ஒரு சில வாரத்திற்குள்ளாக ஐந்நூறு பேருக்கும் அதிகமானவர்களுக்கு அவர் கடிதம் எழுதிவிட்டார். அப்போது அவருடைய உள்ளம் கர்த்தர் மேலுள்ள அன்பினால் பொங்க ஆரம்பித்தது. ‘விசுவாசிகள் எனக்குச் செய்த நன்மைகளைப் பார்க்கிலும் என் அருமை ஆண்டவர் கோடி முறை எனக்கு நன்மை செய்திருக்கிறாரே’ என்று சொல்லி உற்சாகமான இருதயத்தோடு தேவனைத் துதிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் துதிக்கத் துதிக்க அவருடைய உள்ளத்திலிருந்த மனச்சோர்பு மறைந்தேவிட்டது. அவர் புது உற்சாகத்தோடு மிக வல்லமையாக ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

கர்த்தர் உங்களை தோல்விக்கு அல்லாமல் ஜெயத்திற்கே அழைத்திருக்கிறார். உங்களுக்காகப் பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியன் எப்பொழுதும் உங்கள் பட்சத்தில் இருக்கிறபடியால் நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவீர்கள். நீங்கள் ஜெயங்கொண்டவர்களாய் விளங்குவதற்கு பல காரணங்களுண்டு. முதலாவது காரணம், கர்த்தர் எப்பொழும் உங்களோடுகூட இருப்பதுதான். நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரின் பிரசன்னம் முடிவு பரியந்தம் உங்களோடுகூடவே இருக்கிறது (மத். 28:20).

மட்டுமல்ல, உங்களுக்குள்ளே இருக்கிற ஆவியானவர் பெரியவரும், வல்லமையுள்ளவருமாயிருக்கிறார். “உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்” (1யோவான் 4:4) அல்லவா? தேவபிள்ளைகளே, கர்த்தர் ஜெயங்கொண்டு பிதாவினுடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறதுபோல நீங்களும் ஜெயங்கொண்டு என்றென்றைக்கும் அவரோடுகூட அரசாளுவீர்கள்.

நினைவிற்கு:-“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.