No products in the cart.
ஏப்ரல் 17 – சுத்திகரிப்பும், பரிசுத்தமும்!
“பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வந்தான்… மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெரு விரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசினான்” (லேவி. 8:22,23).
லேவியராகமம் புத்தகத்தின் முதல் பாகம் சுத்திகரிப்பையும், இரண்டாவது பாகம் கர்த்தர் விரும்பும் பரிசுத்தத்தையும் போதிக்கிறது. இவை இரண்டும் வெவ்வேறானவை. சுத்திகரிப்பு என்பது ஒரு செயல். பரிசுத்தமாதல் என்பது ஒரு முயற்சி. சுத்திகரிப்பு என்பது ஆரம்பமாகவும், பரிசுத்தமாகுதல் ஒரு முடிவாகவும் இருக்கின்றன. சுத்திகரிப்பை ஆரம்பித்தால்தான் பூரண பரிசுத்தத்திலே போய் உங்களுடைய வாழ்க்கை முடிவடைய முடியும். சுத்திகரிப்பு என்பது அஸ்திபாரம். பரிசுத்தமோ அதன்மேல் எழுப்பப்படும் கட்டடம்.
இயேசுகிறிஸ்து உங்களுடைய சுத்திகரிப்புக்காக தம்முடைய இரத்தத்தையே ஊற்றிக்கொடுத்தார். பரிசுத்தமாவதற்காக பரிசுத்த ஆவியின் அபிஷகத்தை உங்களுக்குத் தந்தார். இதுவரை செய்த பாவத்திலிருந்து நீங்கள் சுத்திகரிக்கப்பட வேண்டும். இனி பாவ சுபாவம் உங்களை அணுகவே முடியாதபடிக்கு பரிசுத்தமாக்கப்பட வேண்டும். பாவ மன்னிப்பைப் பெறுதலும், இரட்சிக்கப்படுதலும் சுத்திகரிப்பின் விளைவுகளாகும். ஒரே நாளிலே நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிடமுடியும். ஆனால், பரிசுத்தமாகுதலோ, உங்களுடைய வாழ்நாளெல்லாம் பிரயாசப்பட்டு முயற்சி செய்யும் அனுபவமாகும்.
பழைய ஏற்பாட்டிலுள்ள ஆசாரியர்கள் சுத்திகரிப்புக்காக ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வலது காதின் மடலிலும், வலது கையின் பெருவிரலிலும், வலது காலின் பெருவிரலிலும் பூசிக்கொண்டார்கள். இது எதை காண்பிக்கிறது?
- வலது காதின் மடல்: வேத சத்தியத்தை கவனமா கேட்க உங்களுடைய காதுகளில் இரத்தம் பூசப்பட வேண்டும். உங்கள் செவிகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். ‘கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்’ என்று சொல்லி தேவ சத்தத்தை கேட்பீர்களாக.
- வலது கையின் பெருவிரல்: இது கையின் கிரியைகளையும், ஊழியத்தையும் குறிக்கிறது. “ஆண்டவரே நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர்” என்று அப். பவுல் கேட்டார் (அப். 9:6). கைகளிலே சுத்திகரிப்பு இருக்குமென்றால்தான் ஊழியத்திலே வல்லமை இருக்கும்.
- வலது காலின் பெருவிரல்: கால்கள் சுவிசேஷத்தை அறிவிக்கும் வேலையைக் குறிக்கிறது. ‘இதோ அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்’ என்று ஏசாயாவோடு சேர்ந்து சொல்லுங்கள். அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு. உங்கள் கால்கள் கர்த்தருடைய ஊழியத்துக்கென்று அர்ப்பணிக்கப்படட்டும். அவருடைய ஊழியத்தைச் செய்ய மனதுருக்கத்தோடு புறப்படுவீர்களாக.
தேவபிள்ளைகளே, எப்பொழுதும் உங்களை கிறிஸ்துவினுடைய இரத்த கோட்டைக்குள் மறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்து நீதியின் ஆயுதங்களாக ஒப்புக்கொடுத்து விடுங்கள்.
நினைவிற்கு:- “நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக” (கொலோ. 2:7).