No products in the cart.
ஏப்ரல் 15 – செழிப்பாக்கும் நதி!
“தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று” (ஆதி. 2:10).
தேவன் மனிதனுக்காக இந்த உலகத்தை உண்டாக்கினார். உலகத்திலே ஒரு ஏதேனை வைத்தார். ஏதேனுக்குள் ஒரு அழகான தோட்டமும் இருந்தது. ஏதேன் என்ற வார்த்தைக்கு “மனமகிழ்ச்சி” என்று அர்த்தம். மனிதனைச் சிருஷ்டித்த கர்த்தர், அவனுக்கு மனமகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்க விரும்பினார். ஆகவே இந்த ஏதேனின் மத்தியிலே விதவிதமான கனிதரும் மரங்களையும், செடிகளையும் உண்டாக்கினார். மனிதன் நித்தமும் அவருடைய மடியிலே செல்லப் பிள்ளையாய் இருந்தான்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். பெரிய உலகம், அதற்குள் ஏதேன், அதற்குள் ஒரு தோட்டம். அது போலவே உங்களுக்குள்ளே ஒரு சரீரம், அதற்குள் ஒரு ஆத்துமா, அதற்குள் ஒரு ஆவி. சரீரம் உலகத்துக்கும், ஆத்துமா ஏதேனுக்கும், ஆவி நடுவிலிருந்த தோட்டத்துக்கும் ஒப்பாயிருக்கிறது. தோட்டத்துக்குத் தண்ணீர் பாந்து அதைச் செழிப்பாக்குகிறதற்காக கர்த்தர் ஒரு நதியை வைத்தார். அந்த நதியினுடைய பெயர் என்ன என்று அவர் எழுதவில்லை. நதியிலிருந்து பிரிந்த நான்கு கிளை ஆறுகளின் பெயர்கள் மட்டுமே வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆனால் அந்த நதி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நதியாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். காரணம், அந்த நதி ஓடுகிற இடமெல்லாம் பொன் விளைந்தது. பிதோலாகும், கோமேதகக்கல்லும் விளைந்தன (ஆதி. 2:11,12). சாதாரண நதி ஓடுமானால் அங்கே நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்கள்தான் விளையும். பொன் விளையும் என்றால் அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நதியாகவே கருதுகிறேன். வேதத்தில் பொன் என்பது பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும் குறிக்கிறது. அப்படியானால் அந்த நதி என்ன நதி?
அந்த நதியினுடைய பெயர் தாவீது ராஜாவுக்குக்கூட தெரியவில்லை. அவர் “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்” (சங். 46:4) என்று குறிப்பிட்டார். ஆனாலும் அந்த நதியின் பெயரை அவர் அறியவில்லை. இயேசு கிறிஸ்துதான் அந்த நதியின் இரகசியத்தை வெளிப்படுத்தினவர்.இயேசு சொன்னார், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” (யோவான் 7:38,39).
பரிசுத்த ஆவியானவரே அந்த நதி. உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை செழிப்பாக்கும்படி தேவன் உங்களுக்குத் தந்திருக்கிற ஒரு அற்புதமான நதி அவர்தான். அவர் உங்களுடைய ஆவிக்குள்ளிருந்து ஆத்துமாவையும் சரீரத்தையும் செழிக்கப்பண்ணுகிறார். பரலோகத்திலிருந்து வருகிற அந்த நதி உங்களுக்குள் பாய்கிறபடியினால், உங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி, சந்தோஷம், மன நிறைவு, செழிப்பு எல்லாம் வருகிறது.
தேவபிள்ளைகளே, அந்த தேவ நதியை நோக்கிப் பாருங்கள். அந்த நதி இன்று உங்களுடைய உள்ளத்தையெல்லாம் நிரப்பட்டும். உங்களுடைய வாழ்க்கையை செழித்தோங்கச் செய்யட்டும்.
நினைவிற்கு:- “பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).