AppamAppam - Tamil

பிப்ரவரி 10 – பெருகும்!

“என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்” (நீதி. 9:11).

ஒவ்வொரு புதுநாளும் கர்த்தர் உங்களுக்குக் கிருபையாய்க் கொடுக்கிற நாளாகும். அதிகாலையிலிருந்து இரவு வரையிலும், ஒவ்வொரு வினாடி நேரமும் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற பரிசாகும். ஆகவே காலையில் எழும்பும்போதே, அந்த நாளுக்காக ஆண்டவரை நீங்கள் ஸ்தோத்தரிக்க கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

அப்படி ஸ்தோத்திரித்துத் துவங்கப்படும் ஒவ்வொருநாளும் உங்களுக்கு ஆசீர்வாதமான நாளாய் இருப்பதை உணருவீர்கள். கருமேகம்போல் உங்களைச் சூழ்ந்துகொள்ளும் துன்பங்கள்கூட திடீரென்று உங்களைவிட்டு அகன்றுபோவதையும், நீங்கள் வெளிச்சத்திற்குள்ளாய் நுழைவதையும் உணர்ந்து பரவசமடைவீர்கள்.

அவருடைய பிரசன்னம், வல்லமை, காருண்யம் ஆகிய அனைத்தும் உங்களோடுகூட இருக்கின்றன. உங்களுக்கு ஒருநாள் என்று சொல்வது, நடு இரவிலிருந்து இருபத்திநான்கு மணி நேரத்தைக் குறிக்கிறது. ஆனால் எபிரெயருக்கு ஒருநாள் என்பது, ஒரு சாயங்காலம் தொடங்கி அடுத்த சாயங்காலம் வரை உள்ள பொழுதைக் குறிக்கிறதாய் இருக்கிறது.

காலங்கள் எப்படி கணக்கிடப்பட்டாலும் ‘உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்றவர் ஒவ்வொரு வினாடியும், நிமிடமும், மணியும், நாளும் உங்களோடுகூட இருக்கிறார். ஒவ்வொருநாளும் ஜெபித்து, ஆண்டவருடைய பிரசன்னத்தை உணர முற்படுங்கள்.

போதகர் பால்யாங்கிசோ, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெயரிட்டு அதை வாக்குத்தத்தமாகச் சுதந்தரித்துக்கொள்ளுவார். அவர் அதிகாலைவேளை எழும்பும்போதே இந்த நாளின் பெயர் ‘பரிசுத்தம்’ என்று பெயர்சூட்டி பரிசுத்தத்திற்காக தேவனை ஸ்தோத்தரித்து அந்த நாளிலே பரிசுத்தத்திலே முன்னேறுவார். அடுத்த நாளுக்கு ‘ஜெபநாள்’ என்று பெயர் சூட்டுவார். அந்த நாளில் அதிகமாய் ஜெபத்தில் தரித்திருப்பார். அதற்கு அடுத்த நாளை ‘கிருபையின் நாள்’ என்று பெயர் சூட்டுவார். இப்படி ஒவ்வொரு நாளுக்கும் அவர் ஒரு பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.

தாவீது ஒவ்வொரு நாளுக்கும் சூட்டுகிற பெயர் “நன்மையும் கிருபையும்” என்பதாகும். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்று அவர் பரவசத்தோடு கூறியதோடல்லாமல், நன்மையையும் கிருபையையும் ஒவ்வொரு நாளிலும் அவர் ஆவலோடு எதிர்பார்த்தார். கர்த்தர் உங்களோடு இருக்கிறபடியினால் ஒவ்வொரு நாளும் மேன்மையான காரியங்களை கர்த்தரிடத்திலிருந்து எதிர்பாருங்கள்.

தேவபிள்ளைகளே, எப்படி பூமியானது சூரியனைச் சுற்றிவருவதைத் தன் வழக்கமாகக்கொண்டு செயல்படுகிறதோ, அதுபோல நீங்களும் உங்கள் வாழ்நாளெல்லாம் கர்த்தரைச் சுற்றிவருவதையே உங்கள் வழக்கமாகக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் கர்த்தருக்காக பிரகாசிப்பீர்கள்.

நினைவிற்கு:- “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” (சங். 118:24).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.