AppamAppam - Tamil

Mar 25 – முழு இருதயத்தோடும் நம்பிக்கை!

“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (நீதி.3:5,6).

தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கையைக் குறித்து, நீதிமொழிகளின் புஸ்தகத்தின் ஒவ்வொரு அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. மேலே கொடுக்கப்பட்ட வசனம் பல மொழிபெயர்ப்புகளில் இன்னும் ஆழமான ஆவிக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறது. “முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து” என்று சொல்லப்படுகிற பதம், “நம்பிக்கையாயிருந்து அவரில் சார்ந்துகொள், அவரையே உறுதியாய் பற்றிப் பிடித்துக் கொள், அதைப் பற்றி வெளிப்படுத்து” என்றெல்லாம் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன.

பிரசித்தி பெற்ற ஒரு யூத ரபி, இந்த வசனத்தைக் குறித்து சொல்லும்போது, “யூத மார்க்கத்தின் எல்லா தத்துவங்களும் இந்த வேத வசனத்தின் அடிப்படையிலே உறுதியாய் நிற்கிறது” கர்த்தர் மேல் நம்பிக்கையுள்ளவன்தான் அவரை சார்ந்து நிற்க முடியும். முழு பழைய ஏற்பாடும் தேவன் பேரில் வைக்கும் நம்பிக்கையின் உபதேச அடிப்படையிலேதான் அமைந்திருக்கிறது. ஞானமுள்ளவர்கள் கர்த்தர் மேல் நம்பிக்கையாயிருந்து, அவருடைய கட்டளையின்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவார்கள்” என்கிறார்.

நீங்கள் சொல் அகராதி புஸ்தகத்தில் நம்பிக்கை என்ற பதத்துக்கான விளக்கத்தை கவனிப்பீர்களென்றால், அதற்கு, “ஒரு நபர் மீதோ, அல்லது ஒரு பொருள் மீதோ, வைக்கப்படும் உறுதியான விசுவாசத்தையும், சார்ந்து கொள்ளக்கூடிய தன்மையையும், அவருடைய உண்மையையும், நீதியையும், நன்நடக்கையையும் வெளிப்படுத்துவதாகும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அடிப்படையாக ஒருவர் மேல் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்களென்றால், அவருடைய வார்த்தைகளும், செயல்களும் சார்ந்துக்கொள்ளக்கூடியவைகளாய் இருக்கின்றன.

அரசாங்கமோ, பொருளாதாரமோ, உலகத்திலுள்ள நிறுவனங்களோ நம்பிக்கையின் அடிப்படையில்தான் நடைபெற்று வருகின்றன. மனைவி தனக்கு உண்மையுள்ளவளாய் இருப்பாள் என்று கணவன் நம்புகிறான். அப்படியே மனைவியும் நம்புகிறாள். உலகத்திலுள்ள ஜனங்களின் உறவு முறைகளெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றன.

 இந்த உலக வாழ்க்கையிலும், உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையிலும் நீங்கள் சார்ந்துகொள்ளக்கூடிய ஒருவர் உண்டென்றால், அது இயேசு கிறிஸ்து ஒருவரே. போராட்டம் நிறைந்த இந்த உலகத்தில் உங்களால் தனிமையாய் நடந்து செல்ல முடியாது. வானமண்டலத்தின் பொல்லாத ஆவிகளின் சேனைகள் சூழ்ந்திருக்கிற இந்த வையகத்திலே உங்களைப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லுகிற ஒருவர்மேல் நீங்கள் சார்ந்துதான் ஆக வேண்டும்.

தேவபிள்ளைகளே, அசைக்க முடியாத தூணாகிய கர்த்தர் மேல் உங்களுடைய முழு நம்பிக்கையை வைத்து சார்ந்து கொள்ளும்போது, கர்த்தர் உங்களை முடிவு பரியந்தமும் வழிநடத்துவார். நினைவிற்கு:- “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்” (எபி.11:1,2).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.