No products in the cart.
Mar 24 – முகம் பார்க்கும் கண்ணாடி!
“ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்” (யாக். 1:23).
வேத வசனமானது, முகம் பார்க்கும் கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு மனுஷன் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து, தன் முக சாயல் எப்படிப்பட்டது என்பதை அறிந்துகொள்ளுகிறான். ஆனால், வேதவாக்கிய கண்ணாடி மனுஷனைப் பார்க்கிறது. அவனுடைய உள்ளிந்திரியங்களை பார்க்கிறது.
சில சகோதரிகள் தங்களுடைய கைப்பைக்குள் சிறு கண்ணாடியை வைத்திருப்பார்கள். அவ்வப்போது தங்களுடைய முகத்தைப் பார்த்துக் கொள்ளுவார்கள். தலை முடியை சரி செய்துகொள்ளுவார்கள். முகம் வியர்த்துப் போயிருப்பதாகக் கண்டால் சோப்பு போட்டு கழுவி சுத்திகரிப்பார்கள். கண்ணாடி அவர்களுடைய முகத்தை சரி செய்து கொள்ள உதவுகிறது. அதுபோல, வேதத்தை வாசிக்கும்போது, வேத வசனங்கள் உங்கள் ஆத்துமாவின் நிலைமையை தெளிவாக சுட்டிக் காண்பிக்கிறதினால், உங்களை நீங்களே சுத்திகரித்துக் கொள்ளுவதற்கு ஏதுவாயிருக்கிறது.
வேடிக்கையான ஒரு கதை உண்டு. ஒரு குரங்கின் கையிலே ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று கிடைத்தது. அதிலே தன் முகத்தைப் பார்த்தது. ‘நான் எவ்வளவு அழகாயிருக்கிறேன். இது என்னை ஒரு குரங்கு போல காட்டுகிறதே’ என்றுச் சொல்லி மூடி வைத்துவிட்டது. ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் பார்த்தது. குரங்கு போன்ற தோற்றத்தைக் கண்டு கண்ணாடியை வைத்து விட்டது.
மூன்றாவது முறையும் எடுத்துப் பார்த்தது. அதற்கு கோபம் வந்து விட்டது. கண்ணாடியிலே ஏதோ தவறு இருக்கிறது. இந்தக் கண்ணாடியை பார்க்கவே கூடாது என்று கல்லில் அடித்து நொறுக்கியது. கோபம் தீர்ந்த பின்பு உடைந்து போன ஒரு சிறிய துண்டை எடுத்து மெதுவாக பார்த்தது. ஒவ்வொரு துண்டும் அதை குரங்கைப் போல்தான் காண்பித்துக் கொண்டேயிருந்தது. முகத்தின் நிஜதோற்றத்தை கண்ணாடி காட்டுகிறது போல, அகத்தைக் காண்பிக்கக்கூடிய கண்ணாடி ஒன்று உண்டென்றால் அது வேத புத்தகம்தான்,
உன்னதப்பாட்டில் சூலமித்தி தன் முகத்தைப் பார்க்கிறாள். பார்த்து விட்டு ‘நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்’ என்று சொல்லுகிறாள் (உன். 1:5). அவளில் கறுப்புமிருக்கிறது, அழகுமிருக்கிறது. ஆதாமின் சுபாவம் கறுப்பாயிருக்கிறது, கிறிஸ்துவின் சுபாவங்கள் அழகாயிருக்கிறது. பாவம் கறுப்பாக்கிவிட்டது. ஆனால், இயேசுவின் இரத்தம் அழகாக மாற்றிவிட்டது.
நீங்கள் வேதத்தை வாசிக்கும்போது, “ஆண்டவரே, நீர் என்னை எனக்கு காண்பிக்க வேண்டும். எல்லா பாவ சுபாவங்களும், குறைபாடுகளும் என்னைவிட்டு நீங்க வேண்டும்” என்றுச் சொல்லி கேட்பீர்களாக. சிலர் தங்கள் கண்களில் பெரிய உத்திரத்தை வைத்துக்கொண்டு மற்றவர்களுடைய கண்களில் இருக்கிற துரும்பைக் கண்டு குற்றம் கண்டுபிடிப்பார்கள்.
தேவபிள்ளைகளே, மற்றவர்களைக் குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்பாக உங்களை ஒரு விசை ஆராய்ந்து பாருங்கள். கர்த்தருடைய சுபாவம் உங்களிலே காணப்படுகிறதா? நினைவிற்கு:- “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாய் யிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்” (மத். 6:22).