No products in the cart.
Mar 23 – முகமுகமாய்!
“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம்; அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்” (1 கொரி. 13:12).
நீங்கள் இப்பொழுது கர்த்தரை தரிசனங்களிலும், சொப்பனங்களிலும் பார்ப்பதும், அவரது வெளிப்பாடுகளைப் பெறுவதும் நிழலாட்டமானதுதான். நீங்கள் கண்ணாடியிலே பார்ப்பதைப் போலத்தான் பார்க்கிறீர்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல், “கண்ணாடியிலே பார்ப்பதுபோல்” என்று எழுதுகிறார். கொரிந்து பட்டணம் அந்த நாட்களில் கண்ணாடிக்குப் பேர்போன பட்டணமாயிருந்தது. ஆனால் அந்த நாட்களில் தற்போது நீங்கள் வைத்திருக்கிறது போல பாதரச முலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இருந்ததில்லை. பாலீஷ் போட்டு மெருகு ஏற்றிய வெண்கல கண்ணாடிகளே பழக்கத்தில் இருந்தன.
மெருகு ஏற்றிய உலோகக் கண்ணாடிகள் தெளிவாய் பிம்பங்களைக் காட்டுவதில்லை! அவற்றில் உருவங்கள் நிழலாட்டமாகவே தோன்றும். மோசே அன்றைக்கு கன்மலையின் வெடிப்பிலே நின்று அப்படிப்பட்ட கண்ணாடி மூலம்தான் கர்த்தரைக் கண்டிருக்க வேண்டும் என்று யூத ரபீகள் தெரிவிக்கின்றனர்.
நீங்கள் இயேசுவை சுவிசேஷங்களில் காண்கிறீர்கள். பிரசங்கங்களில் காண்கிறீர்கள். இயற்கையில் காண்கிறீர்கள். ஆனால் ஒரு நாள் அந்த அன்பின் சொரூபியை நீங்கள் முகமுகமாய்க் காண்பீர்கள். ஆ! அந்த நாள் எவ்வளவு மகிழ்ச்சியான நாள்! அப்பொழுது உங்கள் உள்ளமெல்லாம் பரவசமடைந்து களிகூரும்.
இப்பொழுது நீங்கள் குறைந்த அறிவாலேயே கிறிஸ்துவை அறிந்திருக்கிறீர்கள். ஆனால் அவர் வெளிப்படும் நாளில் அவரை முற்றும் அறிந்து மகிழுவீர்கள். வேதம் சொல்லுகிறது, “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்து கொள்ளுவேன்” (1 கொரி. 13:12).
‘இப்பொழுது அவருடைய அன்பு’ என்று தியானித்த அப்போஸ்தலனாகிய பவுல் ‘அப்பொழுது நித்திய ராஜ்யத்தில் அவருடைய அன்பு எப்பேர்ப்பட்டதாயிருக்கும்’ என்று கற்பனை செய்து பூரித்து மகிழுகிறார். ‘இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன். கடல் போன்ற பெருக்கமான அவரது அன்பை என் சிறுமூளையால் முற்றிலும் அறிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுது நிழலாட்டமாய்க் காண்கிறேன். இந்த சரீரத்தால் கர்த்தரின் முழு மகிமையான அன்பை கண்டு தாங்கிக்கொள்ள இயலாது.
ஆனால் ஒரு நாள் எக்காள சத்தம் தொனிக்கும்போது என் சரீரம் மறுரூபமடையும். நான் கிறிஸ்துவுக்கொப்பான சாயலைத் தரித்துக்கொள்ளுவேன். அவருடைய அன்பின் மகிமையை முழுவதுமாக ருசிப்பேன்’ என்று சொல்லுகிறார்.
“இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய் பார்ப்போம். அப்பொழுது முகமுகமாகக் காண்போம்” என்பதே உங்களுடைய ஏக்கமாயும், எதிர்பார்ப்பாயிருக்கட்டும். அதற்காகவே இக்காலத்துப் பாடுகளையெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியுடன் சகித்து வருகிறீர்கள். தேவபிள்ளைகளே, கர்த்தரை நீங்கள் முகமுகமாய்க் காணும்போது, உங்களுடைய எல்லா பாடுகளும் நீங்கி மகிழ்ச்சியாயிருப்பீர்கள். நினைவிற்கு:- “அவரை நானே பார்ப்பேன்; அந்நியக் கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்து போகிறது” (யோபு 19:27).