No products in the cart.
Mar 22 – முக்கியமான கேள்வி!
“நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?” (மாற்கு. 10:17).
இந்த உலகத்திலே ஒரு மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய சத்தியம் ஒன்று உண்டென்றால், அது இந்த சத்தியம்தான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கேட்க வேண்டிய கேள்வி இந்த கேள்விதான். நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்?
ஒரு ஐசுவரியவானான வாலிபன் இயேசுவினிடத்தில் வந்தான். அவன் அவருக்கு முன்பாக வந்து முழங்கால்படியிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டான். நான் என்ன செய்ய வேண்டும் என்பதே அந்த கேள்வி. இயேசு அவனைப் பார்த்து ‘வேதத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை எல்லாம் கைக்கொள்’ என்றார். அதற்கு அவன், ‘போதகரே, இவைகள் எல்லாவற்றையும் நான் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்’ என்றான்.
இயேசு மனிதனுடைய உள்ளத்தை ஆராய்ந்து அறிகிறவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவன் எல்லா கட்டளைகளையும் தான் கைக்கொண்டிருப்பதாக சொன்னாலும், அவன் தன் வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கவில்லை என்பதை கர்த்தர் அறிந்திருந்தார். அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்காமலிருப்பதின் காரணம் அவன் தன்னை முழுவதுமாய் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. பூரண அர்ப்பணிப்பைக் குறித்து அவனிடத்தில் பேசியபோது, அவனோ துக்கமடைந்தவனாய் திரும்பிச் சென்று விட்டான். இயேசுவிடம் வந்தும் துக்கமாய் சென்றவர்களில் இவனும் ஒருவன்.
கர்த்தர் உங்களுடைய உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கிறார். நீங்கள் முழுவதுமாய் உங்களுடைய வாழ்க்கையை கர்த்தருக்கு அர்ப்பணிக்கும் போதுதான், நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள முடியும். அர்ப்பணிப்பின் வாழ்க்கை கர்த்தருடைய வல்லமையை, உங்களுக்குள் கொண்டு வருகிறது. நித்திய ஜீவனை உங்களுக்குத் தருகிறது.
அப். பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:8-11). என்று சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக எவ்வளவுக்கெவ்வளவு அர்ப்பணிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார். நினைவிற்கு:- “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2 :20).