AppamAppam - Tamil

Mar 20 – முன்பதாகவே!

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரே.1:5).

    எரேமியாவைக் கர்த்தர் அழைத்தபோது, ஒருவேளை அவருக்கு சுமார் இருபத்தி ஐந்து வயதிருக்கலாம். ஆனால் தேவன் அவரைத் தெரிந்து கொண்டது, “தாயின் வயிற்றிலே உருவாவதற்கு முன்பதாக” என்று வேதம் சொல்லுகிறது. தாயின் வயிற்றிலே ஒரு சிறு கருவாய் உருவாவதற்கு முன்பதாகவே கர்த்தர் அவரைத் தீர்க்கதரிசியாய் அபிஷேகம் பண்ணினார். பரிசுத்த ஆவியினால் நிரப்பினார்.

    தேவபிள்ளைகளே, நீங்கள் தற்செயலாய் பூமியிலே தோன்றிவிடவில்லை. கர்த்தருக்கு உங்கள்மேல் ஒரு நோக்கமும் தீர்மானமுமுண்டு. தாயின் வயிற்றிலே நீங்கள் உருவாகும்போதே அவர் தம்முடைய மகிமைக்காக உங்களை முன்குறித்து தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை மறந்து போகாதீர்கள். யோவான்ஸ்நானகனை கர்த்தர் அவனுடைய பிறப்புக்கு முன்பதாகவே தெரிந்துகொண்டார். அவன் தன் தாயின் வயிற்றிலே இருக்கும்போதே கர்த்தர் அவனைப் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் நிரப்பினார்.

    சிம்சோனைப் பாருங்கள். அவன் தாயின் வயிற்றில் உருவாவதற்கு முன்னதாகவே அவனைக் குறித்து கர்த்தருடைய தூதனானவன் அவனுடைய தகப்பனாகிய மனோவாவிடம் பேசினார். அவனை பெற்றெடுப்பதற்கு முன்னதாகவே கவனிக்க வேண்டிய முக்கியமான காரியங்களையும், அவனை வளர்க்க வேண்டிய விதிகளையும்கூட முன்னறிவித்தார்.

    இன்று நீங்கள் பல காரியங்களை தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் கர்த்தர் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதை முதலாவது அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இரட்சிப்பை காண்பிப்பதற்காகவும், உங்களை பரிசுத்தப்படுத்துவதற்காகவும், கர்த்தருடைய ஊழியத்தில் பயன்படுத்துகிறதற்காகவும் கர்த்தர் உங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்.

    எரேமியா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசன ஊழியமானது, அவன் தன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலம் நிறைவேறினபோது கர்த்தர் அவனை தீர்க்கதரிசியாய் அழைத்தார். அபிஷேகம் பண்ணினார், பரிசுத்தப்படுத்தி வல்லமையாய்ப் பயன்படுத்தினார். தேவன் கொண்டிருந்த அநாதி நோக்கமானது, எரேமியாவின் வாழ்க்கையில் அருமையாய் நிறைவேறினது.

    தேவபிள்ளைகளே, உலகத்தோற்றத்திற்கு முன்பாக, உங்களைத் தெரிந்துகொண்ட ஆண்டவர், இப்பொழுது உங்களைச் சந்திக்க சித்தமானார். உங்களுக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர், உங்களை அபிஷேகித்து ஜீவபுத்தகத்திலே உங்கள் பெயரை எழுதவும் சித்தம் கொண்டார். நீங்கள் கர்த்தருடைய பார்வையில் விசேஷமாயிருக்கிறீர்கள். கர்த்தர் உங்களுக்கென்று தனிப்பட்ட வரத்தையும், வல்லமையையும், ஊழியத்தையும் வைத்திருக்கிறார். எத்தனை வித்தியாசப்பட்ட மக்கள், வித்தியாசமான மொழி, பழக்கவழக்கங்கள் இருந்தாலும், அவர்கள் மத்தியிலே கர்த்தருடைய கண்கள் உங்களைக் கண்டு விசேஷமாக்கியிருக்கிறது. நினைவிற்கு:- “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிக ளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வரும்” (அப்.3:21).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.