AppamAppam - Tamil

Mar 19 – முதலாவது!

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்” (மத். 6:33).

கர்த்தர் எல்லாவற்றையும் உங்களுக்குக் கொடுக்க சித்தமாயிருக்கிறார். இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும் என்று வாக்களித்திருக்கிறார். இவைகளெல்லாம் என்றால் என்ன? உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையுமே இவ்வார்த்தைகள் குறிக்கின்றன.

 ஆனால் நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? முதலாவது, கர்த்தரையும், அவருடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேட வேண்டும். அப்பொழுது அவரது இருதயம் மகிழ்ந்து, உன்னதத்திற்குரிய ஆசீர்வாதங்களை மாத்திரமல்லாமல், ஆரோக்கியம் போன்ற உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.

அநேகர் ஜெபிக்க வரும்போது, “எனக்கு ஆண்டவர் சுகம் தந்துவிட்டால் என்னுடைய வீட்டார் எல்லோரும் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு வந்து விடுவோம். எனக்கு வேலை கிடைத்துவிட்டால், நான் கர்த்தருக்கு ஒரு பெரிய தொகையை காணிக்கையாகக் கொடுப்பேன். என் கடன் பிரச்சனை தீர வேண்டும். என் பிள்ளைகளின் திருமணம் நடைபெற வேண்டும். என் வீடு கட்டப்பட வேண்டும்” என்னும் காரணங்களுக்கெல்லாம் கர்த்தரைத் தேடி வருகிறார்கள். அவைகளை எல்லாம் தர கர்த்தர் ஆவலுள்ளவராய் இருக்கிறார். அதே நேரத்தில், நீங்கள் அவைகளுக்காக மாத்திரம் கர்த்தரை தேடுவீர்களென்றால், அவருடைய உள்ளம் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். வேதம் சொல்லுகிறது, “இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்” (1 கொரி. 15:19).

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முதலாவது கர்த்தரைத் தேட வேண்டியதுதான். எப்போதும் அவருடைய பொன் முகத்தை நோக்கிப்பார்த்து, அவருடைய சமுகத்தில் மகிழ்ந்து களிகூருங்கள். நீங்கள் அவரைத் தேடாமல் உலகப்பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பீர்களென்றால், அவர் துக்கத்தோடு உங்களைவிட்டுப் போய்விடுவார்.

ஒரு தேவனுடைய பிள்ளையின் அனுபவத்தை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. “இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.

நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்; என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். நான் அவர்களை விட்டுக் கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்” (உன். 3:1-4).

தேவபிள்ளைகளே, இதுவே உங்கள் அனுபவமாயிருக்கட்டும். நினைவிற்கு:- “கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” (அப். 17:27).

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.